Friday, May 13, 2022

சிறப்பு நண்பன் - விழியன்

சிறப்பு நண்பன் - விழியன்

           வழக்கமாக லோகி எழும் நேரம் காலை ஆறு முப்பது. ஒன்பது மணிக்கு பள்ளி திறந்துவிடும். இரண்டு ஆண்டுகளாக இணைய வழியே வகுப்புகள் நடந்ததால் எட்டே முக்காலுக்குத்தான் லோகி எழுவான். பள்ளிகள் திறந்து இரண்டு வாரமாகி இருக்கும். ஆறு முப்பதுக்கு எழுந்துகொள்வதே சிரமமாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக இன்று ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்துவிட்டான். ஐந்தரைக்கு எல்லாம் குளித்துவிட்டான். தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை நச்சரித்து எழுப்பி தன் பள்ளி சீருடைகளை இஸ்திரி போட்டுத்தரச்சொன்னான். ஏழு மணிக்கு லோகி தயார். அரை நாள் மட்டுமே பள்ளி என்பதால் மதிய சாப்பாடு எடுத்துச்செல்ல தேவையில்லை. 

ஒன்பது மணி பள்ளிக்கு, எட்டு மணிக்கு எல்லாம் போய்விட்டான். அவனை பள்ளியின் வாசலில் அப்பா இறக்கிவிட, ஒரு கல்லினை தட்டிக்கொண்டே பள்ளி மைதானத்தைக் கடந்து வகுப்பறைக்குச் சென்றுவிட்டான். முகத்தில் இருந்த மாஸ்க்கை இறக்கிவிட்டு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று பெருமூச்சுவிட்டான். முன்னர் அமர்ந்து இருந்த 1B வகுப்பினைப் பார்த்து சிரித்துக்கொண்டான். இப்போது முன்னேறி 3Bக்கு போயாச்சு. அவனுக்கு முன்னர் வகுப்பில் ஒருத்தி மட்டும் இருந்தாள். மூன்றாவது வரிசையில் இருக்கும் தன் இருக்கையில் பையினை வைத்துவிட்டு

“ஜெனிஸ், இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?”
அவனுக்கு நான்காவது பாடவேளை PET வகுப்பு என நன்றாக தெரியும். ஆனாலும் ஒருமுறை உறுதிபடுத்திக்கொண்டான். பத்திரமாக இருந்த வெள்ளை ஷூவினை தூசி தட்டி காலையில் அதனை மாட்டிக்கொண்டு வந்துவிட்டான். கால் கொஞ்சம் வளர்ந்து இருந்தது. ”செருப்பே போட்டுகிட்டு போ லோகி”ன்னு அம்மா சொன்னாலும் கேட்காமல் ஷூ போட்டுக்கொண்டு வந்துவிட்டான். தன் இருக்கைக்கு திரும்பி ரப் நோட் எடுத்து லோகி என்று தமிழில் எழுதிவிட்டு புட் பால் ஒன்றினை வரைந்தான்.

மகிழ் வந்தான் அவனிடன் “இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?” என்றான். சாந்தா வந்தாள் அவளிடம் “ இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?”. ரிஷப் வந்தான் அவனிடம் “இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?”. ஒவ்வொருவராக வரவர இதே கேள்வி. டேனியல் வந்த போது மட்டும் “சாப்பிட்டியா டேனி” என்றான்.

வகுப்பிலேயே எல்லோரும் எழுந்து நின்று ப்ரேயரை முடித்துக்கொண்டனர். ”அடுத்த வாரம் முதல் அசம்ப்ளி அறையில் நடக்கும்” என்று நேற்றே சொல்லிவிட்டார் தமிழ் ஆசிரியர். பள்ளி திறந்த மூன்றாம் நாள், டைம் டேபிளை கரும்பலகையில் எழுதிப்போட்டபோது “PET" என்பதை மட்டும் நான்கு வண்ணங்களில் அடித்து வைத்திருந்தான் லோகி. தமிழ் ஆசிரியர் பென்சில்களைப் பற்றி பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். லோகி கையை உயர்த்தினான்.
“என்ன சந்தேகம் லோகி?”
“மிஸ், நாலாவது பீரியட் பிடி தானே மிஸ்”
வகுப்பே கொல் என்று சிரித்தது. ஆமா அதான் உன் சந்தேகமா என முறைத்துவிட்டு பாடத்தை தொடர்ந்தார். இரண்டு பாடவேளைகளுக்க பின்னர் இடைவேளை வந்தது. வரிசையில் ஒவ்வொருவராக கழிவறைக்கு சென்று வந்தனர். “டேனி, வரலையா?” என்று கேட்டான் லோகி. இல்லை என்று தலையாட்டி மறுத்துவிட்டான். 

மூன்றாம் வகுப்பு ஆங்கிலம். அந்த வகுப்பில் யாரும் பேசக்கூடாது. பயங்கரமா கத்திடுவாங்க. இவங்க புது டீச்சர். ஆன்லைன் வந்த பிறகு வந்தவங்க. லோகிக்கு பக்கத்தில் இருந்த சஷாங் “ஏண்டா பிடி பீரியட் மேல அவ்ளோ ஆசை”
“அது பி.இ.டி. Physical Education and Training"
"வாட் இஸ் த சவுண்ட் தேர்”
அமைதியானது. கொஞ்ச நேரத்தில் மணி அடித்தது. வகுப்பில் ஒரே பரபரப்பு. லோகி குனிந்து தன் ஷூ லேசை இறுகக்கட்டிக்கொண்டான். தண்ணீர் குடித்துக்கொண்டான். 

ஆனால்..
கணித ஆசிரியர் உள்ளே நுழைந்தார்.
“மிஸ்ஸ்ஸ்ஸ்” என்று எல்லோரும் கத்த. “போர்ஷன் முடிக்கணும். அடுத்த வருஷம் விளையாடிக்கலாம்” என்றார் ஒரே போடாக. நேராக கரும்பலகையை துடைக்க ஆரம்பித்தார். லோகியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லோருமே அவனைத்தான் பார்த்தார்கள். டீச்சர் வரும்போது இருக்கையில் இருந்து எழுவார்கள். எழுந்த லோகி அமரவே இல்லை. மலர்ந்து இருந்த முகம் வாடிவிட்டது. “சிட் டவுன் லோகி”. அவன் அமரவில்லை. திரும்பத் திரும்ப சொன்னாலும் அமரவில்லை.

குனிந்துகொண்டிருந்த லோகி சன்னமான குரலில் “அ....” என்று ராகமிசைக்க ஆரம்பித்தான். கத்தவில்லை. அ..அ...அ.... என்று சொல்லிக்கொண்டே இருந்தான். பக்கத்தில் இருந்த சஷாங்கும் எழுந்து “அ...” என்று ராகமிசைத்தான். ரெண்டு பேரும் உட்காருங்க, இன்னைக்கு பிஇடி கிடையாது என்றார். ஏன் இவர்கள் கத்துகின்றார்கள் என புரிந்துவிட்டது. இருவரும் நிறுத்தவில்லை. மெல்ல மெல்ல மகிழ், ரிஷப், சாந்தா என எல்லோரும் எழுந்து “அ....” என்று ராகமிசைத்தனர். கணித ஆசிரியருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. புதிய ஆசிரியர் வேறு. “ஸ்டூடன்ஸ் ப்ளீஸ் சிட்” என்று கெஞ்சினார்.

சைக்லிஸ்டைடின் புதிய நண்பர்கள் – விழியன்

சைக்லிஸ்டைடின் புதிய நண்பர்கள் – விழியன்

        சைக்லிஸ்ட் என்றால் யார் தெரியுமா? வீட்டில் இருந்து பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ செல்பவர்களை சைக்லிஸ்ட் எனச் சொல்லமாட்டார்கள். சைக்லிஸ்ட் என்பவர்கள் நெடும்தூரம் சைக்கிளில் பயணம் செய்பவர்கள். ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு, ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கூட சைக்கிளில் பயணம் செய்வார்கள். அவர்கள் ஆசிரியராகவோ, இசைக் கலைஞராகவோ, புகைப்பட கலைஞராகவோ, பெயிண்டராகவோ, விஞ்ஞானியாகவோ, எந்தப் பணி செய்பவராகவும் இருக்கலாம்.
சரி, கதைக்கு வருவோம். நம் கதையின் நாயகன் ஒரு சைக்லிஸ்ட். அவர் ஒரு கணித விஞ்ஞானி. பெயர் ஹான்ஸ். அவர் ஹாலாந்து நாட்டுக்காரர். அவருக்கு ஆஸ்திரேலியா கண்டத்தை சுற்றிப்பார்க்க ஆசை. (ஹாலந்து நாடு எங்கே இருக்கு, ஆஸ்திரேலியா நாடு எங்கே இருக்கு என அப்பா/அம்மாவை காட்டச்சொல்லவும்). அதுவும் சைக்கிளில் சுற்றிப்பார்க்க ஆசை. கிளம்பியும் விட்டார். நம்ம ஊர்களைப்போல நிறைய வீடுகள் எல்லாம் ஆஸ்திரேலியாவில் இல்லை. மனிதர்களும் மிகவும் குறைவு தான். சில சமயம் ஒருவீட்டிற்கும் மற்ற வீட்டிற்கும் இடைவெளி சுமார் 200 கி.மீட்டர் கூட இருக்குமாம். நம்ம ஊரிகளில் நம்ம வீட்டிற்கும் எதிர் வீட்டிற்கும் இடைவெளி பத்து மீட்டர் தான் இருக்கும்.

ஒரே ஒரு பை மட்டுமே எடுத்துச்சென்றார். ஹான்ஸின் பையில் இருந்தது 2-3 ஆடைகள். உணவுப்பொருட்கள். நிறைய தண்ணீர். இரண்டு நாளைக்கு தேவையான தண்ணீர் எடுத்துச்செல்ல வேண்டும் அல்லவா. தண்ணீர் தான் பிரதானம். அதே போல இரவு எங்கேனும் தங்குவதற்கு ஒரு டெண்ட் இருந்தது. டார்ச் லைட். அந்த சாலை நேராக இருந்தது. மிக நேராக ஒரு நேர் கோடுபோல. வளைவுகள் எதுவும் இல்லை. எவ்வளவு தூரம் நேராக இருந்தது தெரியுமா? 1200 கி.மீட்டர். ரொம்ப தூரம் தான் இல்லையா.. அவருக்கு பிடித்தமான பாடலை பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டிச்சென்றார். பல கிலோமீட்டர்களுக்கு இரண்டு பக்கமும் எதுவும் இல்லை. நம்ம ஊர்களைப்போல வயல்கள், மரங்கள் கூட இல்லை. தூரத்தில் ஏதாவும் நகர்வதைப்போல இருக்கும். அவை கங்காருக்கள். ஆஸ்திரேலியாவில் இரண்டு மிருகங்கள் தான் அதிகம் கங்காருக்கள் மற்றும் கோவாலா கரடிகள்.
இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும் சாலையில் சென்றுகொண்டிருந்தார் ஹான்ஸ். அப்போது தான் யாரோ தன்னை பார்ப்பது போலவும் பின் தொடர்வது போலவும் உணர்ந்தார். மரத்தில் அசைவுகள் இருந்தது. சைக்கிளை நிறுத்தி ஒரு மர நிழலில் அமர்ந்தார். சாப்பிட தோன்றியது. நாளை மாலை தான் இதோடு வீடுகள் தென்படும் எனச் சொல்லி இருந்தார்கள். அதனால் தண்ணீரை கவனமாக பயன்படுத்தினார்.

அவர் முன்னே திடீரென இரண்டு உருவங்கள். ஆமாம் கோவாலா கரடிகள் தான். மூக்கு நீளமாக இருக்கும். குட்டி குழந்தை போல அழகாக இருக்கும். ஹான்ஸ் அந்த கரடிகளைப் பார்த்து புன்னகைத்தார். அவை அங்கேயே நின்றன. தான் சாப்பிடும் ரொட்டித்துண்டுகள் சிலவற்றை கரடிகளுக்கு கொடுத்தார். அவை வாங்கி தின்றன. தண்ணீர் பாட்டிலைக் கேட்டு அதிலிருந்த தண்ணீரையும் பருகின.

அங்கிருந்து ஹான்ஸ் கிளம்பும்போது தானும் அவருடன் சைக்கிளில் வருவதாக சைகை செய்தன. அவரும் தன் பையை முன்னே வைத்துக்கொண்டு பின்னிருக்கையில் கோவாலா கரடிகளை அமர வைத்தார். கூடுதல் சுமை இருந்ததால் கொஞ்சம் மெதுவாகவே சைக்கிளை செலுத்தினார். இரண்டு மணி நேரம் கழித்து ஒரு இடத்தில் ஓய்வெடுத்தார். அடிக்கடி கோவாலா கரடிகளைப் பார்த்து புன்னகைத்தார். இருட்ட துவங்கியதும் ஒரு நல்ல இடமாக பார்த்து டெண்ட் அமைத்தார். கோவாலா கரடிகளும் அவருடன் தங்கின. உணவு மறுநாள் இரவு வரை வராது. தண்ணீரும் தீரும் நிலையில் இருந்தது. ஆனாலும் மகிழ்வாக கரடிகளுடன் பகிர்ந்தார்.

ஒரு நாள் முழுக்க சைக்கிள் ஓட்டியதால் அசதியாக இருந்தது ஹான்ஸிற்கு. உறங்கிவிட்டார். நடு இரவில் பயங்கர சத்தம். வெளியே எட்டிப்பார்த்தபோது கோவாலா கரடிகள் சத்தமிட்டுக்கொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெரிய மிருகம் ஓடிக்கொண்டிருந்தது. ஹான்ஸை இந்த கரடிகள் தான் காப்பாற்றி இருக்கின்றது. மீண்டும் புன்னகைத்துவிட்டு நிம்மதியாக உறங்கினார் ஹான்ஸ். 

காலை எழுந்த போது இரண்டு கரடிகளும் அருகே காணவில்லை. அவர் தண்ணீர் பருகும் பாட்டில் மட்டும் காணவில்லை. டெண்டை மடக்கி பொருட்களை பையில் போட்டு கிளம்ப தயாரானார். தூரத்தில் இரண்டு கரடிகள் வருவது தெரிந்தது. கையில் தண்ணீர் பாட்டில். பாட்டில் நிறைய தண்ணீர் இருந்தது. மற்றொரு கரடியின் கையில் நிறைய பழங்கள் இருந்தன. ஹான்ஸிடம் கொடுக்கப்பட்டது. பையில் வைத்துக்கொண்டார். சைக்கிளில் ஏற சைகை செய்தார். கரடிகள் ஏறவில்லை. போய்வாருங்கள் என்பது போல சொன்னது. ஹான்ஸ் சைக்கிள் ஏறி கைகள் அசைத்து தன் பயணத்தை மீண்டும் துவங்கினார்.

-விழியன்

(ஹான்ஸ் நிஜமான விஞ்ஞானி. ஆறுமாதம் ஆஸ்திரேலியாவை சைக்கிளில் சுற்றிவந்தவர். நேரடியாக அவருடைய அனுபவங்களை கேட்டு மகிழ்ந்தேன். மற்றபடி கோவாலா கரடிகள் கதை கற்பனையே)

இருளில் தெரியும் ஒளி - விழியன்

இருளில் தெரியும் ஒளி - விழியன்

      வகுப்பிற்குள் ஒரே சலசலப்பு. பையன்களில் சிலர் சிரித்தார்கள். சிலர் குசுகுசுவென பேசினார்கள். பெண்களில் சிலர் “என்னப்பா” என முணுமுணுத்தார்கள். ஆசிரியர் சக்திவேல் ஒரு மாணவியை வகுப்பிற்குள் அழைத்து வந்திருந்தார். “பசங்களா, இவங்க பேர் மலாலாய் சோயா. பிகார்ல இருந்து வராங்க. இனி உங்க வகுப்பிலதான் படிப்பாங்க. பத்திரமா பார்த்துக்கோங்க” என்று கூறினார். ஆசிரியர் சக்திவேல் வேதியியல் ஆசிரியர். பள்ளிக்கு எது என்றாலும் முன் நின்று நடத்துபவர். துணைத் தலைமை ஆசிரியர். சலசலப்பு முணுமுணுப்பு ஏன் என்றால் மலாலாய் இவர்களைவிட நான்கு அல்லது ஐந்து வயது மூத்தவளாக இருக்க வேண்டும். மேலும் மலாலாயிக்குத் தமிழ் தெரியும் என்ற அறிகுறியே இல்லை. மலாலா முக மலர்ச்சியுடன் மூன்றாம் வரிசையில் அமர்ந்துகொண்டாள்.

அன்று முழுக்க அவளிடம் எல்லோரும் பேச முயன்றனர். ஆனால் மொழி தெரியாததால் பெரிதாக அவளிடம் இருந்து தகவல்கள் பெற முடியவில்லை. மலாலா நான்காம் வகுப்புவரை பீகாரில் படித்திருக்கின்றாள். அப்பா இறந்துவிட, அண்ணன் குடும்பப் பொறுப்பினை ஏற்றுள்ளார். ஊரில் வேலை இல்லாததால் தமிழகத்திற்கு வந்துள்ளார் அண்ணன். ஶ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் தொழிற்பேட்டையில் வேலை கிடைத்தது. குறைந்த வருமானம். அவரால் தங்கையைப் படிக்க வைக்க முடியவில்லை. ஐந்து ஆறு வருடங்களாக பள்ளிக்குப் போகவில்லை. இடையில் மலாலாய்யின் அம்மாவும் இறந்துவிட அண்ணனிடமே மலாலாய் சோயாவும் அவள் அண்ணியும் வந்துவிட்டார்கள். மலாலாய் சோயாவிற்குப் படிக்க ஆசை. அவள் தோழிகள் பலரும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். எல்லாம் குடும்ப சூழல். இந்த நிலையில்தான் சக்தி சாரை எதேச்சையாக சந்திக்கின்றாள். அவர் பள்ளியில் சேர்த்துவிட்டார்.

அன்றைய தினம் இடைவேளையின் போதே மலாலாய் பள்ளியின் பேசுபொருளாக மாறிவிட்டாள். “அவங்க வயசுக்கு பத்தாவது இல்ல படிக்கணும்” என்றனர் சிலர். “தமிழே தெரியாதாம். எப்படி படிப்பாங்க?” என்றனர் சிலர். சில பெண்குழந்தைகள் அவளிடம் சென்று அவள் கைகளைப் பற்றிக்கொண்டனர். ஆனாலும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மலாலாய் வந்தில் விருப்பமில்லை. தலைமை ஆசிரியரிடம் மறுநாள் முறையிடக் கிளம்பினார்கள். அவர்கள் அதைச் சொல்லலாமா வேண்டாமா என்றும் தெரியவில்லை. விடுப்பில் இருந்த தலைமை ஆசிரியர் வந்துவிட்டார். காலையிலேயே பள்ளியின் வாசலில் இருந்து மாணவர்களை அவர் வரவேற்றார். சக்தி சாரும் தலைமை ஆசிரியரும் பேசிக்கொண்டு இருந்தது தெளிவாக வெளியே நின்ற ஆறு மாணவர்களுக்குக் கேட்டது.
“சக்தி சார், எப்படி அந்த பொண்ணை ஆறாவதில் சேர்க்கலாம்? ரொம்ப கஷ்டம் சார். நிறைய பதில் சொல்லணும்”
“....”
“இருக்கிற சிக்கல் போதாதுன்னு இதுவேற புதுசா.. கட்டிடம் இல்ல, கழிவறை இல்ல, க்ளீன் செய்ய ஆள் இல்ல, காம்பெளண்ட் இல்ல..”
“....”
“தமிழே பேசக்கூட வரலன்னு சொல்றீங்க. எப்படி சார் கத்துக்கொடுக்குறது? ரிசல்ட் என்னாகும்?”

வறண்ட குரலில் சக்தி சார் பேசியது நன்றாக வெளியே நின்றவர்களுக்குக் கேட்டது.
“அந்தக் குழந்தை படிக்கணும்னு ஆசைப்படுது. படிக்கணும்ங்கிற அந்த ஆசையே போதும். தமிழும் ஆங்கிலமும் கணக்கும், வேற எதுவுமே மனசு வெச்சா எதுவுமே சாத்தியம். முடியாதுன்னு அந்தக் குழந்தை மனசிலயோ அந்த வகுப்பில இருக்கிற குழந்தைங்க மனசிலயோ விதைச்சிட வேண்டாம். முயற்சி செய்வோம் சார். எல்லாரையும் அரவணைச்சு போறதுதானே கல்வியே”
அறைக்குள் நீண்ட மெளனம் நிலவியது. வெளியே நின்றவர்கள் எதுவும் பேசாமல் வகுப்பிற்குத் திரும்பினார்கள். மலாலாய் சோயாவின் சேர்க்கையைக் கடுமையாக எதிர்த்த சந்தோஷ் மலாலாய் சோயாவிடம் சென்று “வணக்கம்” என்றான். அவளும் “வன்கம்” என்றாள். “இல்லை வணக்கம்”.

ஆசிரியர்கள் பெரிதாக மலாலாய் சோயாவிற்குத் தேவைப்படவில்லை. ஆறாம் வகுப்பு மாணவர்களே சின்ன ஆசிரியர்களாக மாறினார்கள். அவர்களுடைய தம்பி தங்கைகளின் தமிழ்ப் பாடபுத்தகங்களை எடுத்து வந்தார்கள். அது மேல்நிலைப்பள்ளி. ஆறாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் இருக்கும் பள்ளி. ஆனாலும் சுவர்களிலும் கரும்பலகையிலும் அ..ஆ..இ..ஈ என்று தோன்ற ஆரம்பித்தது. மலாலாய் சோயாவிற்காக. கூடவே மலாலாய் மெல்லக் கற்கும் மாணவி. சக நண்பர்கள் அசரவே இல்லை. வகுப்பில் புரியவில்லை என்று அடிக்கடி கைகளை உயர்த்துவாள். ஆசிரியர் நிறுத்தமாட்டார். ஆனால் பாடவேளை முடிந்ததும் ஒரு குட்டிக் கூட்டம் வந்து அவளுக்கு அந்த சந்தேகத்தை விளக்கும்.

மூன்று மாதம் ஓடியது. பள்ளிக்கு கல்வி அமைச்சர் வருவதாக ஒரு நிகழ்ச்சி. தலைமை ஆசிரியருக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. எவை எல்லாம் வேண்டும் என்று பெரிய பட்டியல் போட்டார். ஊர்ப் பெரியவர்கள் எல்லோரும் கூடி என்னென்ன தேவை என்று தனிப் பட்டியல் போட்டார்கள். ஒரு பக்கம் ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். பள்ளி முழுக்கத் தோரணம். கல்வி அதிகாரிகள் பார்வையிட்டனர். காவல் துறையில் இருந்து வந்தனர்.

பெர்சு – விழியன்

பெர்சு – விழியன்

      இரண்டு நாட்களாக அந்த தாத்தாவைக் காணவில்லை. சக்ரிக்காவின் கையில் தேவையான பணம் சேர்ந்துவிட்டது. ஆனால் அவர் இரண்டு நாட்களாக வரவில்லை. சக்ரிக்கா எதற்கு காசு சேமித்தாள் தெரியுமா? மூன்றாம் வகுப்பு படிக்கும் சக்ரிக்கா தினமும் காலை 7.30 மணிக்கு எல்லாம் வீட்டைவிட்டு கிளம்பிடுவாள். தெரு முனையில் இருக்கும் பிள்ளையார் கோவில் வாசலில் அவளுடைய பள்ளிப்பேருந்து தினமும் வரும்.

அவள் தேடும் தாத்தாவை அங்கேதான் சந்தித்தாள். சந்தித்தாள் என்றால் பார்த்தாள். ஆனால் இதுவரையில் பேசியது இல்லை. தாத்தா தினமும் சிரிப்பார். ஆனால் சக்ரிக்கா அவரைப் பார்த்து சிரித்ததாக அவளுக்கு நினைவில் இல்லை. அந்த தாத்தா பூச்செடிகளை விற்பவர். ஒரு மீன்பாடி வண்டியில் நிறைய செடிகளை வைத்துக்கொண்டு அடிக்கடி இவளைக் கடந்து செல்வார். சக்ரிக்கா ஒன்றினை கவனித்தாள், வாரத்தில் நான்கு நாட்கள் இந்தப்பக்கும் கடப்பார். செவ்வாய்க்கிழகை, வியாழக்கிழமை, சனி, ஞாயிறு. நிச்சயமாக இந்த நாட்களில் இவளைக் கடந்து செல்வார். மற்ற நாட்களில் வந்தாலும் வரலாம். அவர் பச்சை நிற மப்ளரை தலையில் எப்பவும் சுற்றி இருப்பார். பழைய எம்.ஜி.ஆர் பாடலை பாடிக்கொண்டே செல்வார்.

சக்ரிக்கா அவரைத் தேடுவதற்கான காரணம் அவரிடம் பூச்செடிகளை வாங்க வேண்டும் என்பதற்காகத்தான். அவளுக்கு பூச்செடி வளர்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. அந்த தாத்தாவும் ஒரு முக்கிய காரணம். அவள் விரும்பியது ரோஜாச் செடி. பள்ளிக்கு பூ வைத்துக்கொண்டு போகக்கூடாது என்று சொல்லி இருந்தாலும் மாலை வந்ததும் சூடிக்கொள்வாள். வீட்டில் அதற்கான இடத்தினையும் தேர்வு செய்தாள். பழைய மண் தொட்டி ஒன்றினையும் பத்திரப்படுத்தினாள். தாத்தாவிடம் வாங்கி செடி வைக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. ஓ காசு வேண்டும் அல்லவா? அதுவும் கிடைத்தது. மூன்று நாட்கள் முன்னர் அப்பா சக்ரிக்காவின் உண்டியலையும் அவள் அண்ணன் குறளின் உண்டியலையும் உடைத்தார். அவரிடம் செலவுக்கு காசில்லை என்று உடைத்தாராம். அப்பா கிட்டயே காசில்லையா என சக்ரிக்கா வியந்தாள். ஆனால் அந்த சில்லரையில் இருந்து கொஞ்சம் தனக்கு தேவை என்று கூறி எடுத்துக்கொண்டாள்.

தாத்தாவைத் தேடி போவதென முடிவு செய்தாள். அண்ணன் குறளையும் அழைத்துக்கொண்டாள். “உன் பங்கு சாக்லேட் தரேன்னு வரல, உன் அண்ணன்றதால வரேன்” என உடன் வந்தான். எங்கு அவரைப் பற்றி விசாரிப்பது என தெரியவில்லை. ஒரு சனிக்கிழமை அவரை அருகே இருக்கும் டீக்கடையில் பார்த்த நினைவு வந்தது. சரி அங்கே சென்று விசாரிக்கலாம் என்று சென்றனர்.
டீக்கடையில் “யாரம்மா சொல்ற? அந்த பெர்சையா?” என சொல்லிவிட்டு அடையாளங்களைக் கூறினாள். அவர் பெயர் என்னவென்று தெரியாதாம் ஆனால் எல்லோரும் அவரை பெர்சு என அழைப்பார்கள் என்று கூறினார்கள். வீட்டிற்கு வழியும் சொன்னார்கள். அந்த டீக்கடையை ஒட்டிய சந்தில் கடைசி வீடு. அது வீடு அல்லா பெரிய தோட்டம். அதன் ஓரத்தில் சின்ன வீடு. 

ஒருவர் வெளியே வந்துகொண்டிருந்தார். “தாத்தா எங்க இருக்கார்” எனக்கேட்டாள் சக்ரிக்கா. வீட்டை நோக்கி “பெர்சு, உன்னை பாக்க ரெண்டு கொழந்தங்க வந்திருக்காங்க.” என்றார். நீங்க உள்ள போங்க அங்கே கட்டிலில் படுத்திருக்கார். புதுப்பிக்கப்படாத பழைய வீடு. எல்லாமே பழைய பொருட்கள். தாத்தா கட்டிலில் படுத்திருந்தார். இவர்களை கண்டதும் முகம் மலர்ந்தார்.

“அந்த கோவில் பக்கத்துல நிக்கிற பாப்பா தான நீ? என்னம்மா வேண்டும்” என்றார்.

“தாத்தா எனக்கு ரெண்டு ரோஜா செடி வேணும். மஞ்சள் கலர் ரோஜா, நீல நிற ரோஜா.” என்றாள் சக்ரிக்கா. தாத்தா மெல்ல எழுந்தார். வாங்க என வெளியே அழைத்துச்சென்றார். “ஏன் தாத்தா ரெண்டு நாளா வரல” என்றாள். “தாத்தாவுக்கு நோவு. தாத்தாவுக்குன்னு இருக்குறது இந்த பூக்கள் மட்டும் தான். நாளைக்கு காலையில வந்திடுவேன். ஆமா இன்னைக்கு பள்ளிக்கூடம் இல்லையா?”. இன்று கொஞ்சம் தாமதமாகப் போகலாம். அதுவும் வண்ண ஆடைகளுடன். சக்ரிக்கா கேட்ட வண்ணத்தில் நான்கு செடிகளை கொண்டு வந்தார். செடிக்கு கீழே கொஞ்சம் மண்ணும் அதனைச் சுற்றி ஒரு மெல்லிய ப்ளாஸ்டிக் கவரும் இருந்தது. இதனை கிழிச்சிட்டு தொட்டில வெச்சிடு என்றார். இரண்டு போதும் என்றாலும் நான்கினையும் கொடுத்துவிட்டார். “தாத்தா ரெண்டுக்கு தான் காசு இருக்கு” என்று சொன்னாலும் கேட்கவில்லை. “சரி தாத்தாவுக்காக ஒன்னு செய்வீங்களா? உங்க வீட்டு வாசல்ல ஒரு மரம் நட்டு தினமும் வளக்கறீங்களா” என்றதற்கு சக்ரிக்கா பதில் தரும் முன்னர் குறள் “உங் கண்டிப்பா தாத்தா” என்றான். அட நம்ம அண்ணனா இது என வியந்தாள்.

தாத்தாவின் தோட்டத்தில் அத்தனை பூக்கள் இருந்தன. இவர் வந்ததும் தோட்டமே மகிழ்ச்சியில் திளைத்தது போல தோன்றியது. காலேஜ் எல்லாம் படிச்சிட்டு பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட் பத்து வாங்கி அது முழுக்க செடி வளர்க்கனும்னு நினைத்தாள் சக்ரிக்கா. அவர்கள் செடிகளை பிடித்துக்கொண்டு வெளியே கிளம்ப, ஒரு கவர் நிறைய வண்ண வண்ண ரோஜாக்களை கொண்டு வந்தார்.

தாடி தாத்தா – விழியன்

தாடி தாத்தா – விழியன்

           தாடி தாத்தாவின் வீடு பள்ளிக்கு போகும் வழியில் இருந்தது. அவர் வீடு பூங்காவை ஒட்டிய வீடு. பழைய வீடு. தாடி தாத்தா தாடி தாத்தா என நிறைய கேட்டிருந்தாலும் யாரும் அவரைப் பார்த்ததே இல்லை. அந்த வீட்டிற்குள் இருக்கின்றார் என்று மட்டும் தெரியும். எப்படி இருப்பார், ஏன் தாடி தாத்தா என்று பெயர் வந்தது, எவ்வளவு பெரிய தாடி என்று யாருக்கும் தெரியாது.

கீர்த்தனா, வதனி மற்றும் மோனி மூவரும் தோழிகள். ஒரே வகுப்பு. ஒரே பள்ளி. தினமும் அந்த தாடி தாத்தா வீட்டு வழியாக தான் பள்ளிக்கு செல்வார்கள். அந்த பூங்காவில் தான் விளையாடுவார்கள். எப்போதும் அந்த வீட்டில் என்ன நடக்கின்றது என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள். ஒரே ஒருவர் மட்டும் அந்த வீட்டிற்குள் சென்று வருவார். முருக்கண்ணா என செல்லமாக அவரை அழைப்பார்கள். தாத்தாவிற்கு தேவையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை அவர் தான் வாங்கி செல்வார். ஆனால் தாத்தாவை பற்றி எந்த தகவலும் சொல்லமாட்டார்.

இந்த மூன்று தோழிகளுக்கும் எப்படியாவது தாத்தாவின் வீட்டிற்குள் சென்றுவிட ஆசை. மெல்ல மெல்ல தைரியம் வந்தது. முதலில் மிகவும் பயந்தார்கள். 
“திருவள்ளுவர் மாதிரி தாடி இருக்குமா?”
“பெரியார் தாத்தா மாதிரி தாடி இருக்குமா?”
இப்படி தாடி பற்றி பேசிக்கொள்வார்கள். ஒரு நாள் அவர்களுக்கு விடுமுறை. காலை பூங்காவிற்கு விளையாட வந்தார்கள். ஆனால் பூங்காவை பூட்டி இருந்தார்கள்.

“வா நாம தாத்தா வீட்டுக்கு போவோம்” என்று ஆரம்பித்தாள் வதனி. யார் ஆரம்பிப்பார்கள் என காத்திருந்தவர்களாக சரி சரி என்றார்கள் இருவரும். கதவு திறந்து தான் இருந்தது. மெல்ல மெல்ல வீட்டிற்குள் சென்றார்கள். வீடு சுத்தமாக இருந்தது. ஒரு சன்னலுக்கு அருகே சாய்வு நாற்காலியில் வெளியே இருந்த மரத்தை பார்த்தபடி தாத்தா அமர்ந்து இருந்தார். அப்போது தான் அவர்கள் கவனித்தார்கள். தாடியின் நீளம் எப்படி 20 அடிக்கு இருக்கலாம். முகத்தில் இருந்து கீழே விழுந்து நாலு ஐந்து சுருட்டலும் இருந்தது. 20 அடி என்றால் 3-4 ஆட்களை மேலே மேலே நிற்க வைத்தால் எவ்வளவு உயரத்திற்கு வருமோ அவ்வளவு உயரம். எம்மாடியோவ்.

சத்தம் கேட்டு தாத்தா திரும்பினார்.
“யாரு?” என்றார். மூவரும் அவருக்கு பக்கத்தில் சென்றனர். அவர்கள் கண்கள் தாடியிலேயே இருந்தது. மோனி தொட்டுப்பார்க்க முயன்றாள். மொழ மொழவின்று இருந்தது. “தாத்தா, எப்படி இவ்வளவு பெரிய தாடி வெச்சிருக்கீங்க. என் தலைமுடிய வார முடியாம பாய் கட் செய்துக்கன்னு அம்மா தினமும் கேட்கின்றார்கள்” என்றாள் கீர்த்தனா. இது தான் அவர்கள் அறிமுகப்படுத்திய விதம். மூவரும் தங்கள் பெயர்களை சொன்னார்கள். அப்பா அம்மா பெயர்களை சொன்னார்கள். பள்ளி பற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் சொன்னார்கள். தாத்தா பற்றி வெளியே பேசும் கதைகளை சொன்னார்கள். தாத்தாவிடம் தாடி பற்றிய கதையை கேட்டார்கள். “எப்படி தாத்தா வளக்கறீங்க, ஏதாச்சும் உரம் போடுவீங்களா. செடி வளர போடுவாங்கன்னு படிச்சோம்”.

ஆரம்பத்தில் குறைவாக பேசிய தாத்தா, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுடன் பேச ஆரம்பித்தார். மூவரும் வீட்டை சுற்றிப்பார்த்தார்கள். கேள்வி கேட்டுகிட்டே இருந்தார்கள். சிலவற்றிற்கு பதில் அளித்தார். சிலவற்றிற்கு புன்னகை மட்டும் செய்தார். மதியம் ஆனது. வீட்டிற்கு கிளம்பினார்கள். தினமும் காலையோ மாலையோ தாத்தாவிற்கு வணக்கம் சொல்லிவிட்டு அன்றைய கதைகள் ஏதாச்சும் சொல்லிவிட்டு போவார்கள். விடுமுறை என்றால் இங்கேயே தான் இருந்தார்கள். தாத்தாவின் தாடிக்கு பிண்ணல் போட்டார்கள். எண்ணை தடவி விடுவார்கள். ஒருநாள் அரை அடி ஸ்கேல் வைத்து மொத்த நீளத்தை அளந்தார்கள். தாத்தா அவர்கள் செய்வதை தடுக்கவே இல்லை. குழந்தைகளுக்கு தாத்தாவிடம் ரொம்ப பிடித்தது அவர் விடும் ஏப்பம் தான். “கியாபுர்க்கி.. கியார்புர்க்கி” என்பார் ஏப்பம் விடும்போது.

ஒரு நாள் காலை தாத்தாவின் வீட்டு வாசலில் கூட்டம் கூடி இருந்தது. பள்ளிக்கு போகும் போது இதனை கவனித்தார்கள் தோழிகள். அச்சோ தாத்தாவுக்கு என்ன ஆச்சுன்னு பயந்துவிட்டார்கள். கூட்டத்தை விளக்கி உள்ளே சென்றார்கள். போலிஸ் கூட இருந்தது. அச்சோ. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? முந்தைய நாள் இரவு ஒரு திருடன் தாத்தா வீட்டில் திருட வந்திருக்கின்றான். பெரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தாத்தா தன் தாடியை விரித்து வைத்திருந்தார் போல. திருடன் அந்த தாடியில் மாட்டிக்கொண்டான். நன்றாக சிக்கிக்கொண்டது. அவன் ஓட தாத்தா ஓட இருவரும் இடித்துக்கொண்டு மயக்கமாகிவிட்டார்கள். முருக்கண்ணா காலையில் வந்து போலிஸுக்கு தகவல் சொல்லி இருக்கின்றார். தாத்தா மூவரை பார்த்தும் புன்னகைத்தார்.

JK Studios - இங்கு இனிமையான புகைப்படங்கள் எடுத்து தரப்படும் - விழியன்

JK Studios - இங்கு இனிமையான புகைப்படங்கள் எடுத்து தரப்படும் - விழியன்

           வீட்டிற்கு எல்லோரும் கிளம்ப தயாராக இருந்தார்கள். எந்நேரமும் பள்ளி மணி அடிக்கலாம். தலைமை ஆசிரியர் எட்டாம் வகுப்பிற்குள் நுழைந்தார். எதையோ அறிவிக்கத்தான் வந்திருக்கின்றார் என பேசிக்கொண்டனர். அவர் வகுப்பிற்கு வந்ததும் தெரியாமல் பேச்சு சத்தம் சலசலத்தது. “கவனி, நாளை மறுநாள் வியாழன் நம்ம பள்ளியில வகுப்பு வகுப்பா ஃபோட்டோ எடுக்க போறோம். எல்லோரும் துணி நல்லா துவச்சு அட்டகாசமா வரணும். பெண்கள் எல்லாம் ரெட்டை ஜடை போட்டுக்கலாமா?” என்றார். “மிஸ் மிஸ், தலைக்கு குளிச்சு தலை விரிச்சு பூ வெச்சுட்டு வரலாமா?” என சரளா கேட்கவும் புகைப்படம் எடுக்கும் தினத்தின் சுரம் அனைவருக்கும் தொற்றிக்கொண்டது. பள்ளி மணி அடித்தும் பெரும்பாலானவர்கள் நகரவே இல்லை.

வியாழன் எப்படி வருவது என்ற பேச்சு துவங்கிவிட்டது. கலர் டிரஸ்ல வரலமா? இல்லடி யூனிபார்ம்லதான் வரணும். அந்த ப்ளூ செப்பல் போட்டுக்கவா? மகேசு அன்றைக்காவது குளிச்சிட்டுவா. தம்பு சுரேசா, நீ முதல் வரிசையில நில்லு இல்லாடி ஃபோட்டோல தெரியமாட்ட. நான் உனக்கு ரோஜாப்பூ எடுத்து வரேன்பா. மதியம் சாப்பாட்டு வேளைக்கு அப்புறமா? முன்னாடியேவா? தம்பிக்கும் ஃபோட்டோ எடுப்பாங்களா? அவன் மூனாவது படிக்கிறான். நச நசவென பேச்சுக்கள். கடைசியாக வகுப்பினை விட்டு வெளியேறியவர்கள் சரளாவும் சத்யாவும்.

இருவரும் அடுத்த அடுத்த தெருவில் வசிக்கின்றார்கள். ஒன்றாம் வகுப்பு முதலே ஒன்றாக படிக்கின்றார்கள். சரளாவின் வீடு முதலில் வந்துவிடும், அதைத்தாண்டி சத்யாவின் வீடு. சரளாவின் வீட்டு வாசலிலேயே ப்ரேக் போட்டு நின்றாள் சத்யா. “என்னப்பா?” “வீட்டுக்குள்ள போய் உன் யூனிபார்ம் டாப்ஸ் கழற்றி தரியா?” அமைதியாக நின்றாள் சத்யா. “இல்லப்பா, இதோ கிழிஞ்சு இருக்கு பாரு, வகுப்பு புகைப்படம் எடுக்கிறப்ப அது தெரிஞ்சா எப்பவும் அதை பாக்குறப்ப எல்லாம் கஷ்டமா இருக்குமில்ல. எங்கக்கா பட்டர்ப்ளை பூப்போட்ட டிசைன் அழகா தைப்பா, உனக்கு தெச்சு தர சொல்றேன்” என்றாள். ஐந்து நிமிடத்தில் ஒரு மஞ்சள் பையில் அவளுடைய ஆடையை கொடுத்தாள் சத்யா. உள்ளிருந்து அம்மாவின் குரல் “சத்யா, இன்னும் என்ன பேச்சு வந்து இந்த பாத்திரத்தை கழுவிடும்மா”. சத்யாவின் அம்மாவிற்கு பல வருடமாக இடுப்புவலி.

மறுநாள் ஆடையை கொடுத்தபோது சத்யாவிற்கு அது அவள் ஆடைதானா என சந்தேகமாக இருந்தது. அவ்வளவு சுத்தமாகவும் கிழந்த இடத்தில் அழகிய டிசைன் போட்டும் பிரமாதமாக இருந்தது. “ஹே” என்று வாயெடுத்தாள் சத்யா. சீக்கிரம் கிளம்பிவா புள்ள என விரட்டினாள். மறுநாள்தான் புகைப்படம் எடுக்கின்றார்கள். அன்றைய நாள் முழுக்க புகைப்படம் பற்றிய பேச்சு நீண்டது. ஆமா, எல்லா க்ளாஸுக்கும்தானாம். மிஸ் எல்லாம் ஒரே கலர்ல சேலை கட்டிகிட்டு வரப்போறாங்களாம். தலைமை ஆசிரியர் அறை வாசலில் சிலர் கூடினார்கள்

“மிஸ் மிஸ் படத்துக்கு எவ்வளவு காசு மிஸ்? என்னைக்குள்ள கொடுக்கணும்?”
“காசெல்லாம் தேவையில்லை. சிலர் நமக்கு பரிசளிச்சு இருக்காங்க”
“டேங்க்ஸ் சொன்னோம்னு சொல்லிடுங்க மிஸ். அடுத்த வருஷம் நாங்க வேற வேற ஸ்கூல் போயிடுவோம். எங்கம்மா பத்தாவது வரை படிச்சிருக்காங்க ஆனா அவங்க நண்பர்கள் படம் எதுவுமே இல்லை. நாப்பது ரூபா கொடுத்து விட்டாங்க மிஸ்”
”சொல்லிட்றேன். க்ளாஸுக்கு போங்க செல்லங்களா”

வியாழன்.
வழக்கத்திற்கு மாறாக பள்ளியே சீக்கிரம் வந்துவிட்டது. இப்போது பள்ளிக்கே ஒரு சந்தேகம். ஒன்றாம் வகுப்பில் இருந்து புகைப்படம் எடுக்கப்போறாங்களா எட்டாம் வகுப்பில் இருந்தா என்று. பக்கத்து கட்டிடத்தில் இருந்து ஒன்றாம் வகுப்பு வரிசையில் வர கடைசியாக எட்டாம் வகுப்பு என புரிந்தது. வெகு தொலைவில் இருந்து புகைப்படம் எடுக்க வந்திருந்தார் ரகுமான். தனி ஆளாக பெஞ்சுகளை அடுக்கினார். எட்டாம் வகுப்பில் இருந்து சில பையன்கள் கிளம்ப, நில்லுடா நாங்க போய் அடுக்கறோம்னு எட்டாம் வகுப்பு ராணிகள் கிளம்பினர். ஆனால் சரளா பதட்டத்தில் இருந்தாள். சத்யாவை இன்னும் காணவில்லை. காலையில் அவள் வீட்டிற்கு போனபோது சத்யாவும் அவள் அம்மாவும் ஆஸ்பிட்டல் போயிருப்பதாக அவள் பாட்டி கூறினார். பள்ளிக்கு வந்துவிடுவாள் என்றும் தெரிவித்து இருந்தார். வகுப்பில் மற்றவர்களும் அவளை சமாதானம் செய்தனர்.

ஒன்றாம் வகுப்பு படம் எடுக்கத்தான் நேரம் எடுத்தது. சடசடவென இரண்டாம், மூன்றாம், நான்காம் வகுப்பு முடிந்தது. பின்னர் ஆசிரியர்களை மட்டும் எடுக்க கொஞ்ச நேரம் பிடித்தது. ஐந்தாம் வகுப்பில் கூடுதல் மாணவர்கள் என்பதால் இரண்டு பெஞ்சு தேவைப்பட்டது. எட்டாம் வகுப்பு மாணவிகள்தான் தன்னார்வலர்கள். புகைப்படக்காரருக்கு எல்லா உதவியும் அவர்கள்தான். தண்ணீர் கொடுப்பது, பசங்களை ஒழுங்காக அமர வைப்பது, பட்டன்கள் போட்டுவிடுவது, தலைவாரி விடுவது என அவர்களே ஒருங்கிணைத்தார்கள். அவ்வப்போது சரளா பேச்சுகொடுத்தாள்.

அன்பிற்கு ஆயிரம் முகங்கள் - விழியன்

அன்பிற்கு ஆயிரம் முகங்கள் - விழியன்

            பேருந்து கிளம்பியது. புளியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து திருப்பூருக்கு வண்டி கிளம்பியுள்ளது. அங்கே நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களை ஆசிரியர் வீராசாமி அழைத்துச் செல்கின்றார். பேருந்திற்கு டீசல் செலவு மட்டும் கொடுத்தால் போதும் என ஓனர் சொல்லிவிட்டார். இப்போது எட்டாவது வருடமாக அழைத்துச் செல்கின்றார். சதீஷுக்கு இது முதல்முறை. கடைசி நிமிடம் வரையில் போவானா இல்லையா எனத் தெரியாமல் இருந்தது. மதிய உணவினை டிபன் பாக்ஸில் எடுத்துவரச் சொல்லி இருந்தார். டிபன் பாக்ஸ் அவன் வீட்டிலேயே இல்லை. வழக்கமாக பள்ளியில் மதியம் சத்துணவு சாப்பிட்டுவிடுவான். அப்பாவும் அம்மாவும் டிபன் பாக்ஸ் எடுத்துச்செல்லும் வழக்கமில்லை. வேலை செய்யும் இடத்திலேயே அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள். தங்கைக்கும் சத்துணவு. கடைசியில் பக்கத்துவீட்டில் டிபன் பாக்ஸ் கடன் வாங்கி, பொங்கு சாதம் எடுத்துக்கொண்டான். கிளம்பும்போது “அண்ணா, எனக்கு புக்ஸ் வாங்கிட்டுவா” என அவன் தங்கை கேட்டிருந்தாள். அவனிடம் மொத்தம் ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது.

பதினோரு மணிக்கு புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவிட்டனர். அப்போதுதான் கண்காட்சியும் துவங்கியது. மொத்தம் நூறு ஸ்டால்கள் இருந்தன. ஒரு மைதானத்தில்தான் கண்காட்சி போட்டிருந்தார்கள். வாசலில் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள செல்பி ஸ்டாண்ட் வைத்து இருந்தார்கள். ஆசிரியர் வீராசாமி எல்லா பசங்களையும் நிற்க வைத்து ஃபோட்டோ எடுத்தார். பின்னர் அலுவலக வாசலில் அமர்வதற்கு இருக்கைகள் இருந்தன. அங்கே அமர வைத்து உள்ளே சென்று என்ன செய்ய வேண்டும் என ஒருவர் கூறினார். நீங்க வாங்குற புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி இருக்கு, நுழைவுச்சீட்டு இல்லை. இந்த சீட்டுல உங்க பேரு, முகவரி, ஃபோன் நம்பர் எல்லாம் எழுதினா குலுக்கல் முறையில ஒரு நாளைக்கு 10 பேருக்கு 500 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் பரிசா கொடுக்கப்படும் என்றார். சுமார் அறுபது மாணவர்கள் வந்திருந்தனர்.

“கவனிங்க, இதோ இந்த காம்பவுண்டுக்குள்ள மட்டும் இருக்கணும். மதியம் ஒரு மணிக்கு வெளிய வந்து சாப்பிட்டு, திரும்ப உள்ள போகலாம். நாம ஒரு மூனு மணிக்கா பஸ்ல கிளம்பிடலாம். சரியா?” என்றார் ஆசிரியர். மைதானத்தின் வாசலில் இருந்த காவல் காப்பவர்களிடமும் பசங்களை வெளியே விடவேண்டாம் என கோரிக்கை வைத்தார்.

எல்லோரும் கண்காட்சியின் புத்தக அரங்கத்திற்குச் சென்றுவிட, சதீஷ் மட்டும் அலுவலக வாசலிலேயே அமர்ந்தான். நண்பர்கள் அழைத்ததற்கு “போங்கடா வரேன்” என்று சொல்லிவிட்டான். அவனிடம் ஐந்து ரூபாய் மட்டும் இருக்கின்றது. உள்ளே போய் புத்தகம் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தால் எதை வாங்குவது என எண்ணினான். வளாகத்திற்குள், அலுவலக அறைக்கு எதிர்புறம் டில்லி அப்பளம் என்ற பேனர் இருந்த கடை இருந்தது. காலாற அதை நோக்கி நடந்தான். அவன் தங்கைக்கு டெல்லி அப்பளம் என்றால் அவ்வளவு பிடிக்கும். ரூபாய் 30 எனவும் மிளகாய் பஜ்ஜி, காலிப்ளவர் பக்கோடா எனவும் எழுதி சிலேட்டில் தொங்கிக்கொண்டு இருந்தது. அப்படியே அருகே பார்த்துவிட்டுத் திரும்பும்போது 


“டேய் சதீசு” என்று குரல். அந்தக் கடைக்குள் இருந்துதான். டோம்னிக் அண்ணன் குரல். கல்லூரியில் படிக்கின்றார். பக்கத்து ஊர்க்காரர். அந்தக் கடையில் பகுதிநேர ஊழியராகப் பணிபுரிகின்றார். பில் போடுவதும் கணக்குகளை பார்த்துக்கொள்வதும் அவர்தான். குடும்பத்திற்கு நன்கு தெரிந்தவர். “என்னடா திருப்பூருக்கு?” என்று கேட்க, பள்ளியில் கண்காட்சிக்கு அழைத்து வந்த விபரத்தைக் கூறினான் சதீஷ். உள்ள வா, ஏதாச்சும் சாப்பிட்றியா என்று கேட்டார். ஏன் புத்தகங்களைப் பார்க்க போகவில்லை என கேட்க, மெளனமாக இருந்தான். டோம்னிக் அண்ணன் தன் கடை ஓனரிடம் கண்காட்சிக்கு உள்ளே போய்வர அனுமதி கேட்டார். கடையில் ஈ ஆடியதால் போய்வரச் சம்மதித்தார். “வாடா” என உள்ளே அழைத்துச்சென்றார். டோம்னிக் அண்ணனுக்கு ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை. அதனால் தினமும் வந்து ஒவ்வொரு அரங்கத்தில் இருக்கும் புத்தகங்களையும் பார்த்துவிட்டார். எங்கே என்ன கிடைக்கும் எனக் கூறினார். எல்லா பசங்களையும் அழைத்தார். என்ன புத்தகம் எல்லாம் இருக்கு, எதை எல்லாம் வாங்கலாம் என்று எல்லா பசங்களுக்கும் கூறினார். ஒருவன் தெனாலிராமன் கதைப் புத்தகத்தை தேர்ந்து எடுத்திருந்தான். “இது உங்க ஸ்கூல் லைப்ரரில இருக்கும், புதுசா இன்னும் நிறைய இருக்கு கண்ணா” என வழி நடத்தினார்.

சதீஷுக்குப் பயங்கர மகிழ்ச்சி. அண்ணனைச் சந்தித்ததும் அவர் கூட அரைமணி நேரம் சுற்றியதும் மகிழ்ச்சியாக இருந்தது. சீக்கிரம் கடைக்குத் திரும்பினார். சதீஷும் கூடவே சென்றுவிட்டான். ஓனர் அவனைக் கூப்பிட்டு பேசினார்.

“நல்லா படிப்பியா?”

“இல்ல”

முனியம்மா பாட்டி - விழியன்

முனியம்மா பாட்டி - விழியன்

           முனியம்மா பாட்டியை அந்த பள்ளியில் படிக்கும் எல்லா குழந்தைகளுக்கும் நன்கு தெரியும். பாட்டி இந்த பள்ளியில் வேலை செய்யவில்லை. ஆனால் தினமும் மதிய வேளையில் குழந்தைகளுக்கு சாப்பாடு எடுத்து வருபவர். இம்மாம் பெரிய சாப்பாட்டுக்கூடை. இனிமேல் அந்த கூடையில் ஒரு அரிசிகூட வைக்க முடியாது என்ற அளவிற்கு முழுக்க சாப்பாட்டுக் கூடைகளாக இருக்கும். நெற்றியில் பெரிய்ய்ய பொட்டு. எலுமிச்சை அளவிற்கு இருக்கும். பாட்டியின் குரல் பயங்கர கணீர் என்று இருக்கும். அந்த வாயில் இருந்து வரும் அதிகமான வார்த்தைகள் “ஒழுங்க சாப்பிடு” என்பதே.

மதியம் சரியாக 11.30க்கு தன் வீட்டைவிட்டு காலி கூடையுடன் கிளம்புவார். சுமார் ஒரு மணி நேர நடையில் ஒவ்வொரு குழந்தைவீடாக சென்று சாப்பாட்டு கூடைகளை வாங்கிடுவார். வீட்டு வாசலில் நிற்கும் போது சாப்பாட்டு கூடை இருக்க வேண்டும் இல்லை என்றால் ஒரு பயங்கர குரல் ஒலிக்கும். முந்தைய நாள் சாப்பாட்டில் குறை இருந்தால் மீண்டும் நினைவுபடுத்துவார். 

“கொய்ந்தைக்கு காரமா இருக்குமா. குறைச்சுக்கோ” என்பார். 12.30 மணிக்கு சாப்பாட்டு மணி அடிக்கவும் முனியம்மா பாட்டி கேட் வாசலை வந்தடையவும் சரியாக இருக்கும். ஆண்டு துவக்கத்திலேயே சாப்பாடு கூடை எடுக்க சொல்லி வைக்க வேண்டும். பள்ளிக்குள் நுழைந்ததும் ஒரு தார்பாய் அவர் கையில் வந்துவிடும். பள்ளியின் ஒரு மூலையில் அந்த தார்பாயை மறைத்து வைத்திருப்பார். அதில் எல்லா குழந்தைகளையும் உட்கார வைப்பார். யார் யாருக்கு என்ன சாப்பாட்டு கூடை சேர வேண்டுமோ அவர்களிடம் கொடுப்பார். பெரிய பசங்க அவருக்கு உதவுவார்கள். பின்னர் ஒவ்வொருவரும் முழுதாக சாப்பிடுவதை உறுதி செய்வார். கொஞ்சம் வைத்தாலும் மிரட்டுவார். அந்த உருட்டல் பார்வையைப் பார்த்ததும் பயந்திடுவார்கள். அப்படியும் மிச்சம் வைக்கும் சேட்டையர்கள் இருக்கவே செய்தார்கள்.

ஏதேனும் குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்றால் மதியமே டீச்சரிடம் பேசிவிட்டு குழந்தையை வீட்டில் விட்டுவிடுவார். பாட்டி பல வருடமாக பள்ளிக்கு பரிச்சயம் என்பதால் ஆசிரியர்களும் நம்பி அனுப்பிவிடுவார்கள். சில நிமிடங்களில் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு குழந்தை வந்து சேர்ந்ததா என்றும் உறுதி செய்திடுவார்கள்.

வித்யா அதே பள்ளியில் படிக்கும் ஒரு அமைதியான சிறுமி. வித்யாவிற்கு அந்த பாட்டியின் கூட்டத்தில் அமர்ந்து சாப்பிடவேண்டும் என்று ஆசை. ஆனால் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு செல்வதால் காலையிலேயே சாப்பாடு செய்து கொடுத்து அனுப்பிவிடுவார்கள். பாட்டியின் கூட்டத்தில் அந்த தார்பாயில் அமர்ந்து சாப்பிட வித்யாவிற்கு பயங்கர ஆசை. சாப்பிட்ட பிறகு என்றாவது பாட்டியின் அருகே சென்று நிற்பாள். “என்ன கண்ணு சாப்பிட்டியா?” என்பார். எந்த குழந்தையின் பெயர் தெரியவில்லை என்றாலும் கனிவாக பேசிவிடுவார். சாப்பிடவில்லை என்றால் தான் மிரட்டல் எல்லாம். 

தன் பெற்றோரிடம் எவ்வளவோ சொல்வாள் மதிய சாப்பாட்டினை அந்த பாட்டியிடம் கொடுத்து அனுப்புங்க என்று. ஆனால் சாத்தியப்படவில்லை. ஆண்டின் இறுதியில் அந்த விஷயம் சாத்தியமானது. வித்யாவின் அப்பாவிற்கு வட நாட்டிற்கு மாற்றம் வந்துவிட்டது. அம்மாவும் வேலையை விட்டுவிட்டார். இன்னும் ஒரு மாதத்தில் கிளம்பவேண்டும். பள்ளியில் கடைசி மாதம். ஆனால் ஒரு வாரத்திற்கு தான் முழுநாள் பள்ளி. அதாவது தேர்வு ஆரம்பித்தால் பாதி நாட்கள் மட்டுமே பள்ளி, முனியம்மா பாட்டியை பார்க்க முடியாது.

எப்படியோ பேசி வித்யாவின் சாப்பாடு முனியம்மா பாட்டியின் கூடையில் ஏறியது. வித்யாவின் அம்மா வேலையை விட்டிருந்ததால் பாட்டியிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பினார். அதுவும் ஒரே ஒரு வாரத்திற்கு தான். வித்யாவிற்கு ஏகப்பட்ட குஷி. மதியம் எப்ப ஆகும் என காத்திருந்தாள். எல்லோரிடமும் இன்னைக்கு மதியம் எனக்கு முனியம்மா பாட்டி சாப்பாடு எடுத்து வருவாங்களே என்று சந்தோஷமாக கூறினாள்.

தார்பாயில் அமர்ந்து உண்டாள். வேண்டுமென்றே போதும் பாட்டி என்று பாதி சாப்பாட்டில் நிறுத்தினாள். “ஒழுங்கா சாப்பிட்றியா இல்லையா” என்று மிரட்டல். சிரித்துவிட்டு சாப்பிட்டாள் வித்யா. எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பைகளை பாட்டியில் கூடையில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். வித்யா மட்டும் அங்கேயே நின்றாள். 

“என்ன கண்ணு, க்ளாஸுக்கு போகல?” என்றார் பாட்டி. 

“இந்தா பாட்டி” என்று ஒரு டிபன் பாக்ஸை நீட்டினாள் வித்யா. 

“நீ சாப்பிடலையா. நான் பார்த்தனே நீ முழுசா சாப்பிட்டயே”

“பாட்டி நான் சாப்பிட்டேன். இது உங்களுக்காக எடுத்து வந்தது. எப்படியும் நீங்க திரும்ப எல்லா பாக்ஸையும் கழுவிட்டு ஒவ்வொரு வீடா கொடுத்துட்டு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். எவ்வளவு பசி இருக்கும். அதான் அம்மாகிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு பாக்ஸ் கொடுத்துவிடச் சொன்னேன்”

“கண்ணு” என்று முழுமையாக சொல்லக்கூட முடியவில்லை பாட்டியால். கண்கள் நீரால் தழும்பியது.

கறுப்பழகியின் புன்னகை – விழியன்

கறுப்பழகியின் புன்னகை – விழியன்

             கறுப்பழகி என்ற அந்த குதிரை தன் நண்பன் கங்கனுக்காக காத்திருந்தது. கறுப்பழகியின் நிறம் கறுப்பு என்று சொல்லத் தேவையில்லை. கறுப்பழகியின் ஒரே வேலை காலை வீட்டில் இருந்து கங்கனை பள்ளிக்கு அழைத்துவர வேண்டும். மீண்டும் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவேண்டும். கேட்க எளிமையாக இருக்கலாம் ஆனால் கங்கனின் வீடு இருப்பது ஒரு மலையில். அதுவும் அது ஒரு அடர்ந்த காடு. சரியான பாதை இருக்காது. பெரியவர்கள் கொஞ்சம் சுலபமாக நடந்து வராலாம் ஆனால் கங்கன் சிறுவன் அல்லவா. கறுப்பழகி மீது கங்கனுக்கு மிகுந்த அன்பும் பாசமும் உண்டு. கறுப்பழகியும் கங்கனை பத்திரமாக பாதுகாக்கும்.

அன்று மழை வரும்போல இருந்தது. ஆனாலும் வகுப்புகள் சீக்கிரம் முடியவில்லை. முடிந்ததும் கங்கன் ஓடி வந்தான். அவனை மேலே ஏற்றிக்கொண்டு வேகமாக காட்டினை அடைந்தது. காட்டை தொட்டதுமே அடர் மழை. ஒரு மரத்தின் கீழே நின்றார்கள். மழை நின்றபாடில்லை. பயங்கர மழை. அது ஒரு பெரிய மரம். இருவரும் மறைந்துகொள்ளும் அளவிற்கு பெரிய பொந்து இருந்தது. கறுப்பழகிக்கு தாகம் எடுத்தது ஆனாலும் வேறு வழி இல்லை. நடு இரவில் மழை நின்றது, ஆனால் பயங்கர இருட்டாக இருந்ததால் காலையில் தான் போக முடியும்.

திடீரென பேச்சுக்குரல் கேட்டது. கங்கன் சத்தம் போடாதே என்று கறுப்பழகிக்கு சைகை காட்டினான். இரண்டு ஒற்றர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். எதிரி நாட்டு ஒற்றர்கள் என்று நன்றாக தெரிந்தது. விஷயம் என்னவென்றால் கங்கன் வசிக்கும் நாட்டின் மீது மறுநாள் படையெடுத்து வருவதாக எதிரி நாடு திட்டமிட்டுள்ளது. உள் நாட்டில் போருக்கு தயாராக இல்லை. அதனால் எளிதாக இந்த நாட்டினை கைப்பற்றிவிடலாம் என்று தான் திட்டம். அந்த இரண்டு ஒற்றர்களும் கொஞ்சம் விடிந்ததும் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்.

நன்றாக விடிந்தது. கங்கனுக்கு வீட்டிற்கு செல்வதா அரண்மனைக்கு செல்வதா என்று குழப்பம். அந்த நாட்களில் போன், ஃபேஸ்புக் போன்ற வசதிகள் இல்லை. நேராகச் சென்று தான் தகவலைக் கொடுக்க வேண்டும். கறுப்பழகி மீது அமர்ந்து “போ. அரண்மனையை நோக்கிப்போ” என்றான் கங்கன். ஏற்கனவே இரவு உணவு சாப்பிடவில்லை, தண்ணீர் வேறு பருகவில்லை சோர்வாக இருந்தது கறுப்பழகி. ஆனாலும் தன் நண்பனின் கட்டளைக்காகவும் தன் நாட்டிற்காகவும் வேகமாக பறந்தது. ஆமாம் அது ஓடவில்லை அத்தனை வேகமாக பறந்தது.


வழியில் ஒரு நீர்தேக்கத்தில் சில நிமிடங்கள் நிறுத்தி தண்ணீர் பருகினார்கள். அந்த சில நிமிடத்தில் அரண்மனைக்கு எவ்வளவு தூரம் என்பதை கங்கன் விசாரித்துவிட்டான். ஆனால் யாரிடமும் என்ன செய்தி என்று பகிரவில்லை. யாரை நம்புவது யாரை நம்புக்கூடாது என்று தெரியவில்லை.

“அரண்மனை வீதி” என்ற வீதியை வந்தடைந்தார்கள். “மன்னரை அவசரமாக பார்க்கவேண்டும்” என்று வாசலில் இருந்த காவலாளியிடம் கூறினான் கங்கன். “மன்னரைப் பார்க்க முடியாது” என மறுத்தான் காவலாளி. கறுப்பழகி சும்மா இருக்கவில்லை. பயங்கர சத்தம் போட்டது. மன்னரின் அறை வரையில் சத்தம் கேட்டது. மன்னரே என்ன ஏதோ விபரீதமான சத்தம் கேட்கின்றது என வாசலுக்கு வந்துவிட்டார். சிறுவன் கங்கன் மற்றும் கறுப்பழகி இருவரையும் பார்த்ததும் ஏதோ விபரீதம் என புரிந்தது. தனி அறைக்கு அழைத்து என்ன செய்தி எனக்கேட்டார். சிறுவன் கங்கன் நடந்ததை விவரித்தான். பதட்டம் அடைந்தார் மன்னர். 

உடனே நெருங்கிய நம்பகமான அமைச்சர்களை வரவழைத்தார். கங்கன் வசிக்கும் பகுதி என்ன அதனை அடுத்து என்ன அரசு இருக்கின்றது எனக் கேட்டு புரிந்துகொண்டார். அடுத்த சில நிமிடங்களில் படை திரட்டப்பட்டது. எதிரி நாடு எந்த பக்கம் தாக்க நினைத்ததோ அந்தப் பக்கம் படை சென்றது. உள்நாட்டின் பெரும் படையை கண்டதும் எதிரி நாட்டு படை பின் வாங்கியது. ஒரு துளி ரத்தம் யாரும் சிந்தவில்லை.

இடையில் கங்கனுக்கும் கறுப்பழகிக்கும் அரண்மனையில் ராஜ உபச்சாரம். அவன் வீட்டிற்கும் தகவல் சொல்லப்பட்டது. மாலை பத்திரமாக படைவீரர்களின் பாதுகாப்புடன் மலையில் இருக்கும் வீட்டில் விடப்பட்டான். மன்னர் பெரும் பரிசு பொருட்களையும் கொடுத்து அனுப்பினார்.

மறுநாள் வழக்கம்போல பள்ளிக்கு சென்றான் கங்கன். நேற்று நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை என காச்மூச்சென கத்திவிட்டு வகுப்பிற்கு வெளியே நிற்குமாறு ஆசிரியர் சொல்லிவிட்டார். மரத்தின் நிழலின் அமர்ந்திருந்த கறுப்பழகி கங்கனைப் பார்த்து சிரித்தது, கங்கனும் கறுப்பழகியைப் பார்த்து சிரித்தான்.

- விழியன்

மழை நாள் ஒன்றில் – விழியன்

மழை நாள் ஒன்றில் – விழியன்

       அந்த நாளை மறக்கவே முடியாது. சரியாக நான்கு வருடமாகின்றது. அப்போது நான் சின்னப் பெண். இப்போதும் சின்னவள் தான். ஆனால் அக்கா என கூப்பிட ஒரு தம்பி இருக்கின்றான். நான் தான் அன்று அந்த குழந்தைகள் படம் பார்க்க வேண்டும் என அழுதேனாம். இந்த நாளில் நடந்தது பாதி நினைவில் இருக்கு மீதி அப்பாவும் அம்மாவும் சொன்னது. நான், அப்பா, அம்மா மூவரும் அந்த படத்திற்கு போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தோம். தம்பி அப்போது அம்மாவின் வயிற்றில் இருந்தான். இரண்டு சக்கர வாகனத்தில் நான் பெட்ரோல் டாங்கில் அமர்ந்து வந்தேன்.

நல்ல மழை பிடித்துவிட்டது. மழை ஆரம்பிக்கும் முன்னரே நாங்கள் ஒரு பேருந்து நிலைய நிழற்குடையின் கீழ் நின்றுவிட்டோம். அரை மணி நேரத்திற்கு மேல் நல்ல மழை. அப்பா எவ்வளவோ சொன்னார், நீங்க ரெண்டு பேரும் ஆட்டோவில் போயிடுங்கன்னு. அம்மா தான் மறுத்துவிட்டார். இதோ கொஞ்சதூரம் வாங்க என வண்டியில் சென்றோம். மழை பெய்ததாலும் நகர் முழுக்க சாலை சீரமைக்கப்பட்டு வந்ததாலும் உடனே வாகன நெரிசல் ஏற்பட்டது. அடி அடியாக நகர்ந்து கடைசியில் வண்டி நின்றே விட்டது. இனி ஆட்டோ கூட பிடிக்கமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டது.

எங்கள் வண்டிக்கு பக்கத்தில் ஒரு சிகப்பு நிற கார் நின்றிருந்தது. லேசான மழைத்தூறல் பெய்துகொண்டிருந்தது. உள்ளே இருந்து ஒருவர் என்னையும் அம்மாவையும் காரில் அமரும்படி அழைத்தார். வண்டியை ஓரத்திற்கு நகர்த்த முடியாது, அருகிலும் ஒதுங்குவதற்கு இடம் இல்லை. அப்பா மட்டும் வண்டியில் இருக்க நானும் அம்மாவும் காருக்குள் சென்றோம். முதலில் அம்மா வர மறுத்தார், காரில் இருந்த அத்தை தான் உள்ளே வரும்படி அழைத்தார். அப்பா அப்படி அழைக்க தான் சொல்லி கொடுத்திருந்தார். அங்கிள் ஆண்டி என அழைப்பதை தவிர்க்கும்படி சொல்லி இருந்தார். காரினை ஓட்டி வந்தது அந்த அத்தை தான். மாமா பின்னிருக்கையில் அமர்ந்து இருந்தார். அம்மா முன்னாலும் நான் பின்னாலும் அமர்ந்தோம்.

அம்மாவின் வயிறு பெரியதாக இருந்ததால் காருக்குள் செல்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது. காரின் சீட்டினை மாமா சரி செய்தார். 

அன்று மிகப்பெரிய வாகன நெரிசல். இதனைப்போல நான் மீண்டும் இவ்வளவு மோசமான வாகன நெரிசலை பார்க்கவில்லை. சுமார் இரண்டுமணி நேரம் ஒரு அடி கூட நகரவில்லை. காருக்குள் மாமா என்னிடம் நன்றாக பேசினார். அம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டு வந்தார்கள். என் பெயர், பள்ளி, நண்பர்கள் பெயர், என்ன விளையாட்டு விளையாடுவாய், பார்த்துவிட்டு வந்த படம் பற்றி எல்லாம் கேட்டார். சிரிக்க சிரிக்க பேசினார். அவருடைய மீசை அவ்வளவு பெரிதாக இருந்தது. நிஜமான மீசையா என தொட்டும் பார்த்தேன்.

அன்றைய தினம் தான் அந்த மாமாவிற்கு பிறந்தநாள். வீட்டிற்கு சென்றாலும் நாங்கள் இருவர் தான் இருப்போம் அதனால் இங்கயே வெட்டிவிடலாம் என்றார். நான் தான் கேக் வெட்டினேன். எல்லோரும் கேக் சாப்பிட்டோம். வண்டியிலேயே அமர்ந்து இருந்த அப்பாவிற்கும் ஒரு கேக் கொடுத்தேன். 

வண்டிகள் முன்னே நகர ஆரம்பித்தாலும் மழை விட்டபாடில்லை. அம்மாவிற்கு வலி வந்தது என்றார். குழந்தை வெளியே வர இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கு என்று அம்மா அத்தையிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அம்மாவின் வலி அதிகரித்தது. காரிலேயே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக சொல்லிவிட்டு காரினை வேகமாக செலுத்தினார் அத்தை.

அன்று இரவே தம்பி பிறந்தான். மாமாவும் அத்தையும் தான் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அப்பாவின் வண்டி பஞ்சராகி மருத்துவமனைக்கு வர ஒருமணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. என்னை அந்த மாமா பத்திரமாக பார்த்துக்கொண்டார். அந்த நாள் மறக்கவே முடியாத நாள். தம்பி அத்தனை அழகாக இருந்தான்.

அது நடந்து சரியாக நான்கு வருடம் ஆகின்றது. அந்த நாளுக்கு பிறகு அத்தையையும் மாமாவையும் பார்க்கவே முடியவில்லை. நாங்களும் சில மாதத்தில் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றுவிட்டோம். இன்று தம்பியை பள்ளியில் சேர்க்க செல்கின்றோம். 

பள்ளியின் வாசலில் அந்த சிகப்பு நிற காரினை பார்த்ததும் “அம்மா, இது அந்த மாமா அத்தை காரா இருக்குமா?” எனக்கேட்டேன். “சிகப்பு காரெல்லாம் அவங்க காரா?” எனச் சொல்லிவிட்டு பள்ளிக்குள் நுழைந்தோம்.
அங்கே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மாமா தான் பள்ளியின் முதல்வர். அவருக்கு எங்களை நினைவில் இல்லை, ஆனால் அந்த சம்பவத்தை சொன்னவுடன் நினைவிற்கு வந்துவிட்டது. மிகவும் மகிழ்ந்தார். அட பெரிய பெண்ணாகிட்டயே என்றார். அந்த நாள் அவர் பிறந்த நாள் பரிசு கேட்டபோது அவர் கன்னத்தில் நான் முத்தம் கொடுத்ததை மறக்காமல் நினைவுபடுத்தினார்.

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா” என்றேன். 

“அட எப்படி உனக்கு தெரியும் ? “ என்றார்.

வாச்மென் தாத்தாவின் பேத்தி – விழியன்

வாச்மென் தாத்தாவின் பேத்தி – விழியன்

ராதாவிற்கு அந்த பருப்பு சுண்டல் மிகவும் பிடித்துவிட்டது என புரிந்துகொண்டோம். மகேஷின் வீட்டு கொலுவிற்கு அந்த சுண்டல் கொடுக்கப்பட்டது. நாளை தான் கடைசி நாள் கொலு. எங்கள் பல அடுக்கு அப்பார்ட்மெண்டில் பல வீடுகளில் கொலு கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு நாளும் நான்கு ஐந்து வீடுகளுக்கு சென்று கொலு பார்த்துவிட்டு சுண்டல் சாப்பிடுவது வழக்கம்.

ராதா தன் தாத்தாவின் வீட்டிற்கு வந்திருக்கின்றாள். ராதாவின் தாத்தா எங்கள் அப்பார்ட்மெண்டில் பணி புரியும் ஒரு காவலாளி. வாசலில் இருப்பார், பைப் ரிப்பேரானால் அதனை சரி செய்வார், மோட்டர் போடுவார், தண்ணீர் லாரிகளை சரியாக நிற்க வைப்பார், விருந்தாளிகள் உள்ளே நுழைந்து திண்டாடினால் சரியான ப்ளாட்டிற்கு அழைத்துச் செல்வார். அவருடைய பெயர் எங்கள் யாருக்குமே தெரியாது. “வாட்ச்மேன் தாத்தா” என்று தான் அழைப்போம். ராதா அவருடைய பேத்தி. ஊரில் படிக்கின்றாளாம். காலாண்டு தேர்வுக்கு விடுமுறை என்பதால் அவளுடைய அப்பா அவளை இங்கே அழைத்து வந்திருக்கின்றார். ஆனால் பள்ளி திறந்தும் அவள் பள்ளிக்கு போகவில்லை. ஊரில் விட ஆளில்லை, தாத்தாவால் ஒரு நாள் விடுப்பு எடுக்க முடியாது. ஊரில் இருந்து அவளுடைய அப்பாவோ அம்மாவோ வந்தால் தான் திரும்ப செல்ல முடியும். அவளாகவும் தனியாக செல்ல முடியாது.

ராதாவை மூன்று நாட்களாக தான் எங்களுக்கு பழக்கம். எங்களுக்கும் விடுமுறை இருந்ததால் ஒரு நாள் அவளை விளையாட்டுகளில் சேர்த்துக்கொண்டோம். விளையாடி முடித்து பூங்காவில் அமர்ந்து பேசியபோது தான் அவள் தன் மொத்த கதைகளையும் கூறினாள். ‘கொலு’ என்ற வார்த்தையே அவளுக்கு புதிதாக இருந்தது. அப்பார்ட்மெண்டில் எங்கள் நண்பர்கள் கூட்டம் மிகப்பெரியது. சுரேஷ், ரமேஷ், மகேஷ், கார்த்திக், தினேஷ், சுந்தர், விக்ரம், ராதிகா, யாமினி, அனுமிதா, சந்திரா என நிறைய பேர் உண்டு. கொலு என்ன என்று விளக்கியதும் ‘எங்க ஊர் கோவிலில் சாமியை படியில் வெச்சிருப்பாங்க அதான் கொலுவா?. ஆனா எங்களை கோவிலுக்கு போகக்கூடாதுன்னு சொல்லுவாங்க’ என்றாள். பருப்பு சுண்டல் ராதிகா வீட்டில் இருந்து வந்தது. வாட்சுமேன் தாத்தா ராதாவை தேடி வந்தார். அவருடைய வீடு ஒரே ஒரு அறை தான். அப்பார்மெண்ட் ஒட்டியபடி இருக்கும் கட்டிடத்தில் சின்ன சின்ன அறைகள் கொண்டு வீடுகள் இருந்தன. அதில் தான் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். ராதாவை அழைத்து சென்றார். 

தினேஷ் தான் ஆரம்பித்தான் “டேய் ராதா கொலுவையே பார்த்ததில்லையாம், நாளை யார் வீட்டுக்கு கூட்டிகிட்டு போகலாம்?”

ராதிகா அந்த யோசனையை முன் வைத்தாள் “நாம யார் வீட்டுக்காச்சும் போகறதவிட நாம் ஏன் அவளுக்கு ஒரு கொலுவை ஏற்பாடு செய்யக்கூடாது?” என்றாள்.

நாங்கள் எல்லாம் அந்த யோசனையை கேட்டு சுறுசுறுப்பானோம். திட்டம் இது தான். மோட்டர் அறைக்கு பக்கத்தில் படிக்கட்டுகள் இருக்கு. அந்த வழியை யாரும் பயன்படுத்துவதில்லை. மிக அவசரத்திற்கு மட்டுமே அதனை பயன்படுத்துவார்கள். அந்த படிக்கட்டில் கொலு வைப்பது என திட்டம். ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் சில பொம்மைகள் எடுத்துவரவேண்டும் என பேசிக்கொண்டோம்.
செய்தி இப்படியே ஒவ்வொரு நண்பர்களுக்கும் சொல்லப்பட்டது. பெரியவர்களுக்கு சொல்ல வேண்டாம் , கூறினால் தடை போட்டுவிடுவார்கள் என உஷாராக இருந்தோம். எங்களுக்கு அடுத்த செட் பசங்களும் எங்களுடன் சேர விண்ணப்பித்தார்கள். வயது வாரியாக இங்கு செட் இருந்தது. மாலை 4 மணிக்கு கூடி அடுக்கலாம் என்பது திட்டம்.

விடுமுறை நாள் என்பதால் மறுநாள் சரியாக 4 மணிக்கு எல்லோரும் அந்த படிக்கட்டுக்கு பக்கத்தில் ஆஜர். ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் திட்டமிட்டதைவிட அதிகமான பொம்மைகள். பெரிய அண்ணகள் இன்னும் கொலுவை பிரமாதப்படுத்தினார்கள். மூன்று ஜமுக்காலங்களை எடுத்து வந்திருந்தார்கள். பள்ளி ப்ராஜக்டிற்கு செய்த விளக்குகளை சில அக்காக்கள் எடுத்து வந்திருந்தார்கள். அதனை விட பிரமாதமாக ஏழு தூக்கில் சுண்டல் வந்திருந்தது. சுந்தர் ஒரு பெரிய தூக்கினை வீட்டில் இருந்து எடுத்து வந்தான். அதில் எல்லா சுண்டலையும் கொட்டி நன்றாக கலக்கிவிட்டார்கள். 

சிறப்பு விருந்தினர் வேறு யாரும் அல்ல ராதா தான். தாத்தாவின் வீட்டிற்கு சென்று நான்கு பேர் அழைத்து வந்தோம். அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அவளுக்கு தான் முதல் சுண்டல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொம்மையாக இது என்ன இது என்ன என விசாரித்தாள். 

விஷயம் எப்படியோ பெரியவர்களுக்கு கசிந்துவிட்டது. மொத்த அப்பார்மெண்டே அங்கே குவிந்துவிட்டது. எல்லோரும் குழந்தைகளை பாராட்டினார்கள். இந்த வருட சிறந்த கொலு நம்ம அப்பார்மெண்டிலேயே இது தான் என்று கூறினார்கள். நாங்கள் ஒருமித்த குரலில் கூறினோம் “இது ராதாவின் கொலு”.

- விழியன்