முனியம்மா பாட்டியை அந்த பள்ளியில் படிக்கும் எல்லா குழந்தைகளுக்கும் நன்கு தெரியும். பாட்டி இந்த பள்ளியில் வேலை செய்யவில்லை. ஆனால் தினமும் மதிய வேளையில் குழந்தைகளுக்கு சாப்பாடு எடுத்து வருபவர். இம்மாம் பெரிய சாப்பாட்டுக்கூடை. இனிமேல் அந்த கூடையில் ஒரு அரிசிகூட வைக்க முடியாது என்ற அளவிற்கு முழுக்க சாப்பாட்டுக் கூடைகளாக இருக்கும். நெற்றியில் பெரிய்ய்ய பொட்டு. எலுமிச்சை அளவிற்கு இருக்கும். பாட்டியின் குரல் பயங்கர கணீர் என்று இருக்கும். அந்த வாயில் இருந்து வரும் அதிகமான வார்த்தைகள் “ஒழுங்க சாப்பிடு” என்பதே.
மதியம் சரியாக 11.30க்கு தன் வீட்டைவிட்டு காலி கூடையுடன் கிளம்புவார். சுமார் ஒரு மணி நேர நடையில் ஒவ்வொரு குழந்தைவீடாக சென்று சாப்பாட்டு கூடைகளை வாங்கிடுவார். வீட்டு வாசலில் நிற்கும் போது சாப்பாட்டு கூடை இருக்க வேண்டும் இல்லை என்றால் ஒரு பயங்கர குரல் ஒலிக்கும். முந்தைய நாள் சாப்பாட்டில் குறை இருந்தால் மீண்டும் நினைவுபடுத்துவார்.
“கொய்ந்தைக்கு காரமா இருக்குமா. குறைச்சுக்கோ” என்பார். 12.30 மணிக்கு சாப்பாட்டு மணி அடிக்கவும் முனியம்மா பாட்டி கேட் வாசலை வந்தடையவும் சரியாக இருக்கும். ஆண்டு துவக்கத்திலேயே சாப்பாடு கூடை எடுக்க சொல்லி வைக்க வேண்டும். பள்ளிக்குள் நுழைந்ததும் ஒரு தார்பாய் அவர் கையில் வந்துவிடும். பள்ளியின் ஒரு மூலையில் அந்த தார்பாயை மறைத்து வைத்திருப்பார். அதில் எல்லா குழந்தைகளையும் உட்கார வைப்பார். யார் யாருக்கு என்ன சாப்பாட்டு கூடை சேர வேண்டுமோ அவர்களிடம் கொடுப்பார். பெரிய பசங்க அவருக்கு உதவுவார்கள். பின்னர் ஒவ்வொருவரும் முழுதாக சாப்பிடுவதை உறுதி செய்வார். கொஞ்சம் வைத்தாலும் மிரட்டுவார். அந்த உருட்டல் பார்வையைப் பார்த்ததும் பயந்திடுவார்கள். அப்படியும் மிச்சம் வைக்கும் சேட்டையர்கள் இருக்கவே செய்தார்கள்.
ஏதேனும் குழந்தைக்கு உடம்பு சரி இல்லை என்றால் மதியமே டீச்சரிடம் பேசிவிட்டு குழந்தையை வீட்டில் விட்டுவிடுவார். பாட்டி பல வருடமாக பள்ளிக்கு பரிச்சயம் என்பதால் ஆசிரியர்களும் நம்பி அனுப்பிவிடுவார்கள். சில நிமிடங்களில் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு குழந்தை வந்து சேர்ந்ததா என்றும் உறுதி செய்திடுவார்கள்.
வித்யா அதே பள்ளியில் படிக்கும் ஒரு அமைதியான சிறுமி. வித்யாவிற்கு அந்த பாட்டியின் கூட்டத்தில் அமர்ந்து சாப்பிடவேண்டும் என்று ஆசை. ஆனால் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு செல்வதால் காலையிலேயே சாப்பாடு செய்து கொடுத்து அனுப்பிவிடுவார்கள். பாட்டியின் கூட்டத்தில் அந்த தார்பாயில் அமர்ந்து சாப்பிட வித்யாவிற்கு பயங்கர ஆசை. சாப்பிட்ட பிறகு என்றாவது பாட்டியின் அருகே சென்று நிற்பாள். “என்ன கண்ணு சாப்பிட்டியா?” என்பார். எந்த குழந்தையின் பெயர் தெரியவில்லை என்றாலும் கனிவாக பேசிவிடுவார். சாப்பிடவில்லை என்றால் தான் மிரட்டல் எல்லாம்.
தன் பெற்றோரிடம் எவ்வளவோ சொல்வாள் மதிய சாப்பாட்டினை அந்த பாட்டியிடம் கொடுத்து அனுப்புங்க என்று. ஆனால் சாத்தியப்படவில்லை. ஆண்டின் இறுதியில் அந்த விஷயம் சாத்தியமானது. வித்யாவின் அப்பாவிற்கு வட நாட்டிற்கு மாற்றம் வந்துவிட்டது. அம்மாவும் வேலையை விட்டுவிட்டார். இன்னும் ஒரு மாதத்தில் கிளம்பவேண்டும். பள்ளியில் கடைசி மாதம். ஆனால் ஒரு வாரத்திற்கு தான் முழுநாள் பள்ளி. அதாவது தேர்வு ஆரம்பித்தால் பாதி நாட்கள் மட்டுமே பள்ளி, முனியம்மா பாட்டியை பார்க்க முடியாது.
எப்படியோ பேசி வித்யாவின் சாப்பாடு முனியம்மா பாட்டியின் கூடையில் ஏறியது. வித்யாவின் அம்மா வேலையை விட்டிருந்ததால் பாட்டியிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பினார். அதுவும் ஒரே ஒரு வாரத்திற்கு தான். வித்யாவிற்கு ஏகப்பட்ட குஷி. மதியம் எப்ப ஆகும் என காத்திருந்தாள். எல்லோரிடமும் இன்னைக்கு மதியம் எனக்கு முனியம்மா பாட்டி சாப்பாடு எடுத்து வருவாங்களே என்று சந்தோஷமாக கூறினாள்.
தார்பாயில் அமர்ந்து உண்டாள். வேண்டுமென்றே போதும் பாட்டி என்று பாதி சாப்பாட்டில் நிறுத்தினாள். “ஒழுங்கா சாப்பிட்றியா இல்லையா” என்று மிரட்டல். சிரித்துவிட்டு சாப்பிட்டாள் வித்யா. எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பைகளை பாட்டியில் கூடையில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். வித்யா மட்டும் அங்கேயே நின்றாள்.
“என்ன கண்ணு, க்ளாஸுக்கு போகல?” என்றார் பாட்டி.
“இந்தா பாட்டி” என்று ஒரு டிபன் பாக்ஸை நீட்டினாள் வித்யா.
“நீ சாப்பிடலையா. நான் பார்த்தனே நீ முழுசா சாப்பிட்டயே”
“பாட்டி நான் சாப்பிட்டேன். இது உங்களுக்காக எடுத்து வந்தது. எப்படியும் நீங்க திரும்ப எல்லா பாக்ஸையும் கழுவிட்டு ஒவ்வொரு வீடா கொடுத்துட்டு போக இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். எவ்வளவு பசி இருக்கும். அதான் அம்மாகிட்ட சொல்லி உங்களுக்கு ஒரு பாக்ஸ் கொடுத்துவிடச் சொன்னேன்”
“கண்ணு” என்று முழுமையாக சொல்லக்கூட முடியவில்லை பாட்டியால். கண்கள் நீரால் தழும்பியது.
No comments:
Post a Comment