இரண்டு நாட்களாக அந்த தாத்தாவைக் காணவில்லை. சக்ரிக்காவின் கையில் தேவையான பணம் சேர்ந்துவிட்டது. ஆனால் அவர் இரண்டு நாட்களாக வரவில்லை. சக்ரிக்கா எதற்கு காசு சேமித்தாள் தெரியுமா? மூன்றாம் வகுப்பு படிக்கும் சக்ரிக்கா தினமும் காலை 7.30 மணிக்கு எல்லாம் வீட்டைவிட்டு கிளம்பிடுவாள். தெரு முனையில் இருக்கும் பிள்ளையார் கோவில் வாசலில் அவளுடைய பள்ளிப்பேருந்து தினமும் வரும்.
அவள் தேடும் தாத்தாவை அங்கேதான் சந்தித்தாள். சந்தித்தாள் என்றால் பார்த்தாள். ஆனால் இதுவரையில் பேசியது இல்லை. தாத்தா தினமும் சிரிப்பார். ஆனால் சக்ரிக்கா அவரைப் பார்த்து சிரித்ததாக அவளுக்கு நினைவில் இல்லை. அந்த தாத்தா பூச்செடிகளை விற்பவர். ஒரு மீன்பாடி வண்டியில் நிறைய செடிகளை வைத்துக்கொண்டு அடிக்கடி இவளைக் கடந்து செல்வார். சக்ரிக்கா ஒன்றினை கவனித்தாள், வாரத்தில் நான்கு நாட்கள் இந்தப்பக்கும் கடப்பார். செவ்வாய்க்கிழகை, வியாழக்கிழமை, சனி, ஞாயிறு. நிச்சயமாக இந்த நாட்களில் இவளைக் கடந்து செல்வார். மற்ற நாட்களில் வந்தாலும் வரலாம். அவர் பச்சை நிற மப்ளரை தலையில் எப்பவும் சுற்றி இருப்பார். பழைய எம்.ஜி.ஆர் பாடலை பாடிக்கொண்டே செல்வார்.
சக்ரிக்கா அவரைத் தேடுவதற்கான காரணம் அவரிடம் பூச்செடிகளை வாங்க வேண்டும் என்பதற்காகத்தான். அவளுக்கு பூச்செடி வளர்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. அந்த தாத்தாவும் ஒரு முக்கிய காரணம். அவள் விரும்பியது ரோஜாச் செடி. பள்ளிக்கு பூ வைத்துக்கொண்டு போகக்கூடாது என்று சொல்லி இருந்தாலும் மாலை வந்ததும் சூடிக்கொள்வாள். வீட்டில் அதற்கான இடத்தினையும் தேர்வு செய்தாள். பழைய மண் தொட்டி ஒன்றினையும் பத்திரப்படுத்தினாள். தாத்தாவிடம் வாங்கி செடி வைக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. ஓ காசு வேண்டும் அல்லவா? அதுவும் கிடைத்தது. மூன்று நாட்கள் முன்னர் அப்பா சக்ரிக்காவின் உண்டியலையும் அவள் அண்ணன் குறளின் உண்டியலையும் உடைத்தார். அவரிடம் செலவுக்கு காசில்லை என்று உடைத்தாராம். அப்பா கிட்டயே காசில்லையா என சக்ரிக்கா வியந்தாள். ஆனால் அந்த சில்லரையில் இருந்து கொஞ்சம் தனக்கு தேவை என்று கூறி எடுத்துக்கொண்டாள்.
தாத்தாவைத் தேடி போவதென முடிவு செய்தாள். அண்ணன் குறளையும் அழைத்துக்கொண்டாள். “உன் பங்கு சாக்லேட் தரேன்னு வரல, உன் அண்ணன்றதால வரேன்” என உடன் வந்தான். எங்கு அவரைப் பற்றி விசாரிப்பது என தெரியவில்லை. ஒரு சனிக்கிழமை அவரை அருகே இருக்கும் டீக்கடையில் பார்த்த நினைவு வந்தது. சரி அங்கே சென்று விசாரிக்கலாம் என்று சென்றனர்.
டீக்கடையில் “யாரம்மா சொல்ற? அந்த பெர்சையா?” என சொல்லிவிட்டு அடையாளங்களைக் கூறினாள். அவர் பெயர் என்னவென்று தெரியாதாம் ஆனால் எல்லோரும் அவரை பெர்சு என அழைப்பார்கள் என்று கூறினார்கள். வீட்டிற்கு வழியும் சொன்னார்கள். அந்த டீக்கடையை ஒட்டிய சந்தில் கடைசி வீடு. அது வீடு அல்லா பெரிய தோட்டம். அதன் ஓரத்தில் சின்ன வீடு.
ஒருவர் வெளியே வந்துகொண்டிருந்தார். “தாத்தா எங்க இருக்கார்” எனக்கேட்டாள் சக்ரிக்கா. வீட்டை நோக்கி “பெர்சு, உன்னை பாக்க ரெண்டு கொழந்தங்க வந்திருக்காங்க.” என்றார். நீங்க உள்ள போங்க அங்கே கட்டிலில் படுத்திருக்கார். புதுப்பிக்கப்படாத பழைய வீடு. எல்லாமே பழைய பொருட்கள். தாத்தா கட்டிலில் படுத்திருந்தார். இவர்களை கண்டதும் முகம் மலர்ந்தார்.
“அந்த கோவில் பக்கத்துல நிக்கிற பாப்பா தான நீ? என்னம்மா வேண்டும்” என்றார்.
“தாத்தா எனக்கு ரெண்டு ரோஜா செடி வேணும். மஞ்சள் கலர் ரோஜா, நீல நிற ரோஜா.” என்றாள் சக்ரிக்கா. தாத்தா மெல்ல எழுந்தார். வாங்க என வெளியே அழைத்துச்சென்றார். “ஏன் தாத்தா ரெண்டு நாளா வரல” என்றாள். “தாத்தாவுக்கு நோவு. தாத்தாவுக்குன்னு இருக்குறது இந்த பூக்கள் மட்டும் தான். நாளைக்கு காலையில வந்திடுவேன். ஆமா இன்னைக்கு பள்ளிக்கூடம் இல்லையா?”. இன்று கொஞ்சம் தாமதமாகப் போகலாம். அதுவும் வண்ண ஆடைகளுடன். சக்ரிக்கா கேட்ட வண்ணத்தில் நான்கு செடிகளை கொண்டு வந்தார். செடிக்கு கீழே கொஞ்சம் மண்ணும் அதனைச் சுற்றி ஒரு மெல்லிய ப்ளாஸ்டிக் கவரும் இருந்தது. இதனை கிழிச்சிட்டு தொட்டில வெச்சிடு என்றார். இரண்டு போதும் என்றாலும் நான்கினையும் கொடுத்துவிட்டார். “தாத்தா ரெண்டுக்கு தான் காசு இருக்கு” என்று சொன்னாலும் கேட்கவில்லை. “சரி தாத்தாவுக்காக ஒன்னு செய்வீங்களா? உங்க வீட்டு வாசல்ல ஒரு மரம் நட்டு தினமும் வளக்கறீங்களா” என்றதற்கு சக்ரிக்கா பதில் தரும் முன்னர் குறள் “உங் கண்டிப்பா தாத்தா” என்றான். அட நம்ம அண்ணனா இது என வியந்தாள்.
தாத்தாவின் தோட்டத்தில் அத்தனை பூக்கள் இருந்தன. இவர் வந்ததும் தோட்டமே மகிழ்ச்சியில் திளைத்தது போல தோன்றியது. காலேஜ் எல்லாம் படிச்சிட்டு பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட் பத்து வாங்கி அது முழுக்க செடி வளர்க்கனும்னு நினைத்தாள் சக்ரிக்கா. அவர்கள் செடிகளை பிடித்துக்கொண்டு வெளியே கிளம்ப, ஒரு கவர் நிறைய வண்ண வண்ண ரோஜாக்களை கொண்டு வந்தார்.
No comments:
Post a Comment