வீட்டிற்கு எல்லோரும் கிளம்ப தயாராக இருந்தார்கள். எந்நேரமும் பள்ளி மணி அடிக்கலாம். தலைமை ஆசிரியர் எட்டாம் வகுப்பிற்குள் நுழைந்தார். எதையோ அறிவிக்கத்தான் வந்திருக்கின்றார் என பேசிக்கொண்டனர். அவர் வகுப்பிற்கு வந்ததும் தெரியாமல் பேச்சு சத்தம் சலசலத்தது. “கவனி, நாளை மறுநாள் வியாழன் நம்ம பள்ளியில வகுப்பு வகுப்பா ஃபோட்டோ எடுக்க போறோம். எல்லோரும் துணி நல்லா துவச்சு அட்டகாசமா வரணும். பெண்கள் எல்லாம் ரெட்டை ஜடை போட்டுக்கலாமா?” என்றார். “மிஸ் மிஸ், தலைக்கு குளிச்சு தலை விரிச்சு பூ வெச்சுட்டு வரலாமா?” என சரளா கேட்கவும் புகைப்படம் எடுக்கும் தினத்தின் சுரம் அனைவருக்கும் தொற்றிக்கொண்டது. பள்ளி மணி அடித்தும் பெரும்பாலானவர்கள் நகரவே இல்லை.
வியாழன் எப்படி வருவது என்ற பேச்சு துவங்கிவிட்டது. கலர் டிரஸ்ல வரலமா? இல்லடி யூனிபார்ம்லதான் வரணும். அந்த ப்ளூ செப்பல் போட்டுக்கவா? மகேசு அன்றைக்காவது குளிச்சிட்டுவா. தம்பு சுரேசா, நீ முதல் வரிசையில நில்லு இல்லாடி ஃபோட்டோல தெரியமாட்ட. நான் உனக்கு ரோஜாப்பூ எடுத்து வரேன்பா. மதியம் சாப்பாட்டு வேளைக்கு அப்புறமா? முன்னாடியேவா? தம்பிக்கும் ஃபோட்டோ எடுப்பாங்களா? அவன் மூனாவது படிக்கிறான். நச நசவென பேச்சுக்கள். கடைசியாக வகுப்பினை விட்டு வெளியேறியவர்கள் சரளாவும் சத்யாவும்.
இருவரும் அடுத்த அடுத்த தெருவில் வசிக்கின்றார்கள். ஒன்றாம் வகுப்பு முதலே ஒன்றாக படிக்கின்றார்கள். சரளாவின் வீடு முதலில் வந்துவிடும், அதைத்தாண்டி சத்யாவின் வீடு. சரளாவின் வீட்டு வாசலிலேயே ப்ரேக் போட்டு நின்றாள் சத்யா. “என்னப்பா?” “வீட்டுக்குள்ள போய் உன் யூனிபார்ம் டாப்ஸ் கழற்றி தரியா?” அமைதியாக நின்றாள் சத்யா. “இல்லப்பா, இதோ கிழிஞ்சு இருக்கு பாரு, வகுப்பு புகைப்படம் எடுக்கிறப்ப அது தெரிஞ்சா எப்பவும் அதை பாக்குறப்ப எல்லாம் கஷ்டமா இருக்குமில்ல. எங்கக்கா பட்டர்ப்ளை பூப்போட்ட டிசைன் அழகா தைப்பா, உனக்கு தெச்சு தர சொல்றேன்” என்றாள். ஐந்து நிமிடத்தில் ஒரு மஞ்சள் பையில் அவளுடைய ஆடையை கொடுத்தாள் சத்யா. உள்ளிருந்து அம்மாவின் குரல் “சத்யா, இன்னும் என்ன பேச்சு வந்து இந்த பாத்திரத்தை கழுவிடும்மா”. சத்யாவின் அம்மாவிற்கு பல வருடமாக இடுப்புவலி.
மறுநாள் ஆடையை கொடுத்தபோது சத்யாவிற்கு அது அவள் ஆடைதானா என சந்தேகமாக இருந்தது. அவ்வளவு சுத்தமாகவும் கிழந்த இடத்தில் அழகிய டிசைன் போட்டும் பிரமாதமாக இருந்தது. “ஹே” என்று வாயெடுத்தாள் சத்யா. சீக்கிரம் கிளம்பிவா புள்ள என விரட்டினாள். மறுநாள்தான் புகைப்படம் எடுக்கின்றார்கள். அன்றைய நாள் முழுக்க புகைப்படம் பற்றிய பேச்சு நீண்டது. ஆமா, எல்லா க்ளாஸுக்கும்தானாம். மிஸ் எல்லாம் ஒரே கலர்ல சேலை கட்டிகிட்டு வரப்போறாங்களாம். தலைமை ஆசிரியர் அறை வாசலில் சிலர் கூடினார்கள்
“மிஸ் மிஸ் படத்துக்கு எவ்வளவு காசு மிஸ்? என்னைக்குள்ள கொடுக்கணும்?”
“காசெல்லாம் தேவையில்லை. சிலர் நமக்கு பரிசளிச்சு இருக்காங்க”
“டேங்க்ஸ் சொன்னோம்னு சொல்லிடுங்க மிஸ். அடுத்த வருஷம் நாங்க வேற வேற ஸ்கூல் போயிடுவோம். எங்கம்மா பத்தாவது வரை படிச்சிருக்காங்க ஆனா அவங்க நண்பர்கள் படம் எதுவுமே இல்லை. நாப்பது ரூபா கொடுத்து விட்டாங்க மிஸ்”
”சொல்லிட்றேன். க்ளாஸுக்கு போங்க செல்லங்களா”
வியாழன்.
வழக்கத்திற்கு மாறாக பள்ளியே சீக்கிரம் வந்துவிட்டது. இப்போது பள்ளிக்கே ஒரு சந்தேகம். ஒன்றாம் வகுப்பில் இருந்து புகைப்படம் எடுக்கப்போறாங்களா எட்டாம் வகுப்பில் இருந்தா என்று. பக்கத்து கட்டிடத்தில் இருந்து ஒன்றாம் வகுப்பு வரிசையில் வர கடைசியாக எட்டாம் வகுப்பு என புரிந்தது. வெகு தொலைவில் இருந்து புகைப்படம் எடுக்க வந்திருந்தார் ரகுமான். தனி ஆளாக பெஞ்சுகளை அடுக்கினார். எட்டாம் வகுப்பில் இருந்து சில பையன்கள் கிளம்ப, நில்லுடா நாங்க போய் அடுக்கறோம்னு எட்டாம் வகுப்பு ராணிகள் கிளம்பினர். ஆனால் சரளா பதட்டத்தில் இருந்தாள். சத்யாவை இன்னும் காணவில்லை. காலையில் அவள் வீட்டிற்கு போனபோது சத்யாவும் அவள் அம்மாவும் ஆஸ்பிட்டல் போயிருப்பதாக அவள் பாட்டி கூறினார். பள்ளிக்கு வந்துவிடுவாள் என்றும் தெரிவித்து இருந்தார். வகுப்பில் மற்றவர்களும் அவளை சமாதானம் செய்தனர்.
ஒன்றாம் வகுப்பு படம் எடுக்கத்தான் நேரம் எடுத்தது. சடசடவென இரண்டாம், மூன்றாம், நான்காம் வகுப்பு முடிந்தது. பின்னர் ஆசிரியர்களை மட்டும் எடுக்க கொஞ்ச நேரம் பிடித்தது. ஐந்தாம் வகுப்பில் கூடுதல் மாணவர்கள் என்பதால் இரண்டு பெஞ்சு தேவைப்பட்டது. எட்டாம் வகுப்பு மாணவிகள்தான் தன்னார்வலர்கள். புகைப்படக்காரருக்கு எல்லா உதவியும் அவர்கள்தான். தண்ணீர் கொடுப்பது, பசங்களை ஒழுங்காக அமர வைப்பது, பட்டன்கள் போட்டுவிடுவது, தலைவாரி விடுவது என அவர்களே ஒருங்கிணைத்தார்கள். அவ்வப்போது சரளா பேச்சுகொடுத்தாள்.
No comments:
Post a Comment