தையல் சிட்டு (Common Tailorbird):
==============================
வீட்டுத் தோட்டத்திலோ அல்லது வெளியில் ஏதாவது சிறு சிறு புதர்களிலோ, மரங்களிலோ "tuui-whee" "tuui-whee" என்ற அழகான குரலை கேட்டிருப்போம். சில நேரங்களில் அந்த குரலுக்கான பறவையையும் கண்டிருக்கலாம்.
அந்தப் பறவை Common Tailorbird என்று அறியப்படும் தையல் சிட்டு தான்.
மேற்புறம் சற்றே பச்சை, தலையில் ஆரஞ்சு கலந்த பழுப்பு நிறம், சற்றே நீண்ட கூர்மையான அலகு, சிட்டுக்குருவியை ஒத்த அளவில் இருக்கும்.
ஏன் இந்தப் பெயர்?
=================
இந்தப் பறவை இலைகளை இணைத்து ஒரு தேர்ந்த தையல்காரர் போல் தங்களது அலகால் தைத்து , தங்களுக்கான கூடுகளை அமைத்துக் கொள்வதால் இப்பெயர் பெற்றன.
எப்படி இலைகளை தைக்கிறது?
==============================
வேட்டையாடிகளின் கண்களில் இருந்து தப்புவதற்காகவும், வெயில் மழை போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் பெரும்பாலும் தாவரத்தின் மையத்தில் உள்ள இலைகளையே கூடமைக்க தேர்ந்தெடுக்கும்.
பெண் பறவைகள், மிகுந்த கவனத்துடன் கூட்டுக்கான அடிப்படை அமைப்பை தரக்கூடிய சற்றே பெரிய, உறுதியான இலையையே தேர்ந்தெடுக்கும்.
குஞ்சுகளின் பாரத்தையோ அல்லது தையல்கள் சரியாக பொருந்தாத காரணத்தாலோ பழுத்த மற்றும் காய்ந்த இலைகளை தேர்ந்தெடுப்பதில்லை.
இலைகளில் தையல் இடுவதற்கு முன்னர், பெண் பறவை தன் உடலைச் சுற்றி அந்த இலையால் சுற்றி அளவு பொருந்துகிறதா என்று உறுதி செய்து கொள்ளும்.
குழு அமைக்க வேண்டிய இலைகளைத் தேர்ந்தெடுத்த பின்னர் தனது காலால் இலைகளை சேர்த்து பிடித்து கூர்மையான அலகால் அவற்றில் மிகச் சிறிய துளைகளையிடும்.
தாவர நார்கள் அல்லது சிலந்தி வலை, caterpillar ஆகியவற்றின் இழை கொண்டு கூடுகளை தைக்கும்.
தைக்கக்கூடிய இழையின் நுனிப்பகுதி ஒரு rivet போல செயல்பட்டு இலைகளை ஒன்றாக பிணைக்கும்.
இவ்வாறு அமைக்கப்படும் ஒரு கூட்டில் ஏறக்குறைய 150 லிருந்து 200 தையல்கள் இருக்கும்.
இவ்வளவு பாடுபட்டு தைக்கக்கூடிய இந்தக் கூட்டில் ஏதாவது குறைகள் கண்டறியப்பட்டால்,(அதாவது தைக்க பயன்படுத்தும் இழைகள் அறுபடலாம், இலைகள் கிழியலாம்) அவற்றை சரி செய்ய கூடுதலான இலைகளை வைத்து அல்லது கூடுதலான தையல்கள் சேர்த்தோ சரி செய்ய முயற்சிக்கும். சரி செய்ய வாய்ப்பு இல்லை என்றால் அந்தக் கூட்டை கைவிட்டு, ஏற்கனவே சேகரித்த நார்கள் மற்றும் இழைகள் ஆகியவற்றைக் கொண்டு புதிதாக கூடமைக்க தொடங்கும்.
இந்தப் பணி காலையிலேயே தொடங்கி ஏறக்குறைய இரண்டு முதல் நான்கு நாட்கள் வரையிலும் நீடிக்கும்.
இலைகளை இணைத்து இழைகளால் தைப்பது பெண் பறவை எனில், அதற்குத் தேவையான பொருட்களை தேடி கொணர்வது ஆணின் வேலையாகும்.
-ப.லோகநாதன்
படங்கள் உதவி மற்றும் மேலும் அறிய
https://www.nhm.ac.uk/discover/the-bird-that-stitches-its-home.html