வாச்மென் தாத்தாவின் பேத்தி – விழியன்
ராதாவிற்கு அந்த பருப்பு சுண்டல் மிகவும் பிடித்துவிட்டது என புரிந்துகொண்டோம். மகேஷின் வீட்டு கொலுவிற்கு அந்த சுண்டல் கொடுக்கப்பட்டது. நாளை தான் கடைசி நாள் கொலு. எங்கள் பல அடுக்கு அப்பார்ட்மெண்டில் பல வீடுகளில் கொலு கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு நாளும் நான்கு ஐந்து வீடுகளுக்கு சென்று கொலு பார்த்துவிட்டு சுண்டல் சாப்பிடுவது வழக்கம்.
ராதா தன் தாத்தாவின் வீட்டிற்கு வந்திருக்கின்றாள். ராதாவின் தாத்தா எங்கள் அப்பார்ட்மெண்டில் பணி புரியும் ஒரு காவலாளி. வாசலில் இருப்பார், பைப் ரிப்பேரானால் அதனை சரி செய்வார், மோட்டர் போடுவார், தண்ணீர் லாரிகளை சரியாக நிற்க வைப்பார், விருந்தாளிகள் உள்ளே நுழைந்து திண்டாடினால் சரியான ப்ளாட்டிற்கு அழைத்துச் செல்வார். அவருடைய பெயர் எங்கள் யாருக்குமே தெரியாது. “வாட்ச்மேன் தாத்தா” என்று தான் அழைப்போம். ராதா அவருடைய பேத்தி. ஊரில் படிக்கின்றாளாம். காலாண்டு தேர்வுக்கு விடுமுறை என்பதால் அவளுடைய அப்பா அவளை இங்கே அழைத்து வந்திருக்கின்றார். ஆனால் பள்ளி திறந்தும் அவள் பள்ளிக்கு போகவில்லை. ஊரில் விட ஆளில்லை, தாத்தாவால் ஒரு நாள் விடுப்பு எடுக்க முடியாது. ஊரில் இருந்து அவளுடைய அப்பாவோ அம்மாவோ வந்தால் தான் திரும்ப செல்ல முடியும். அவளாகவும் தனியாக செல்ல முடியாது.
ராதாவை மூன்று நாட்களாக தான் எங்களுக்கு பழக்கம். எங்களுக்கும் விடுமுறை இருந்ததால் ஒரு நாள் அவளை விளையாட்டுகளில் சேர்த்துக்கொண்டோம். விளையாடி முடித்து பூங்காவில் அமர்ந்து பேசியபோது தான் அவள் தன் மொத்த கதைகளையும் கூறினாள். ‘கொலு’ என்ற வார்த்தையே அவளுக்கு புதிதாக இருந்தது. அப்பார்ட்மெண்டில் எங்கள் நண்பர்கள் கூட்டம் மிகப்பெரியது. சுரேஷ், ரமேஷ், மகேஷ், கார்த்திக், தினேஷ், சுந்தர், விக்ரம், ராதிகா, யாமினி, அனுமிதா, சந்திரா என நிறைய பேர் உண்டு. கொலு என்ன என்று விளக்கியதும் ‘எங்க ஊர் கோவிலில் சாமியை படியில் வெச்சிருப்பாங்க அதான் கொலுவா?. ஆனா எங்களை கோவிலுக்கு போகக்கூடாதுன்னு சொல்லுவாங்க’ என்றாள். பருப்பு சுண்டல் ராதிகா வீட்டில் இருந்து வந்தது. வாட்சுமேன் தாத்தா ராதாவை தேடி வந்தார். அவருடைய வீடு ஒரே ஒரு அறை தான். அப்பார்மெண்ட் ஒட்டியபடி இருக்கும் கட்டிடத்தில் சின்ன சின்ன அறைகள் கொண்டு வீடுகள் இருந்தன. அதில் தான் தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். ராதாவை அழைத்து சென்றார்.
தினேஷ் தான் ஆரம்பித்தான் “டேய் ராதா கொலுவையே பார்த்ததில்லையாம், நாளை யார் வீட்டுக்கு கூட்டிகிட்டு போகலாம்?”
ராதிகா அந்த யோசனையை முன் வைத்தாள் “நாம யார் வீட்டுக்காச்சும் போகறதவிட நாம் ஏன் அவளுக்கு ஒரு கொலுவை ஏற்பாடு செய்யக்கூடாது?” என்றாள்.
நாங்கள் எல்லாம் அந்த யோசனையை கேட்டு சுறுசுறுப்பானோம். திட்டம் இது தான். மோட்டர் அறைக்கு பக்கத்தில் படிக்கட்டுகள் இருக்கு. அந்த வழியை யாரும் பயன்படுத்துவதில்லை. மிக அவசரத்திற்கு மட்டுமே அதனை பயன்படுத்துவார்கள். அந்த படிக்கட்டில் கொலு வைப்பது என திட்டம். ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் சில பொம்மைகள் எடுத்துவரவேண்டும் என பேசிக்கொண்டோம்.
செய்தி இப்படியே ஒவ்வொரு நண்பர்களுக்கும் சொல்லப்பட்டது. பெரியவர்களுக்கு சொல்ல வேண்டாம் , கூறினால் தடை போட்டுவிடுவார்கள் என உஷாராக இருந்தோம். எங்களுக்கு அடுத்த செட் பசங்களும் எங்களுடன் சேர விண்ணப்பித்தார்கள். வயது வாரியாக இங்கு செட் இருந்தது. மாலை 4 மணிக்கு கூடி அடுக்கலாம் என்பது திட்டம்.
விடுமுறை நாள் என்பதால் மறுநாள் சரியாக 4 மணிக்கு எல்லோரும் அந்த படிக்கட்டுக்கு பக்கத்தில் ஆஜர். ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் திட்டமிட்டதைவிட அதிகமான பொம்மைகள். பெரிய அண்ணகள் இன்னும் கொலுவை பிரமாதப்படுத்தினார்கள். மூன்று ஜமுக்காலங்களை எடுத்து வந்திருந்தார்கள். பள்ளி ப்ராஜக்டிற்கு செய்த விளக்குகளை சில அக்காக்கள் எடுத்து வந்திருந்தார்கள். அதனை விட பிரமாதமாக ஏழு தூக்கில் சுண்டல் வந்திருந்தது. சுந்தர் ஒரு பெரிய தூக்கினை வீட்டில் இருந்து எடுத்து வந்தான். அதில் எல்லா சுண்டலையும் கொட்டி நன்றாக கலக்கிவிட்டார்கள்.
சிறப்பு விருந்தினர் வேறு யாரும் அல்ல ராதா தான். தாத்தாவின் வீட்டிற்கு சென்று நான்கு பேர் அழைத்து வந்தோம். அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அவளுக்கு தான் முதல் சுண்டல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொம்மையாக இது என்ன இது என்ன என விசாரித்தாள்.
விஷயம் எப்படியோ பெரியவர்களுக்கு கசிந்துவிட்டது. மொத்த அப்பார்மெண்டே அங்கே குவிந்துவிட்டது. எல்லோரும் குழந்தைகளை பாராட்டினார்கள். இந்த வருட சிறந்த கொலு நம்ம அப்பார்மெண்டிலேயே இது தான் என்று கூறினார்கள். நாங்கள் ஒருமித்த குரலில் கூறினோம் “இது ராதாவின் கொலு”.
- விழியன்
No comments:
Post a Comment