Friday, May 13, 2022

சிறப்பு நண்பன் - விழியன்

சிறப்பு நண்பன் - விழியன்

           வழக்கமாக லோகி எழும் நேரம் காலை ஆறு முப்பது. ஒன்பது மணிக்கு பள்ளி திறந்துவிடும். இரண்டு ஆண்டுகளாக இணைய வழியே வகுப்புகள் நடந்ததால் எட்டே முக்காலுக்குத்தான் லோகி எழுவான். பள்ளிகள் திறந்து இரண்டு வாரமாகி இருக்கும். ஆறு முப்பதுக்கு எழுந்துகொள்வதே சிரமமாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக இன்று ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்துவிட்டான். ஐந்தரைக்கு எல்லாம் குளித்துவிட்டான். தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை நச்சரித்து எழுப்பி தன் பள்ளி சீருடைகளை இஸ்திரி போட்டுத்தரச்சொன்னான். ஏழு மணிக்கு லோகி தயார். அரை நாள் மட்டுமே பள்ளி என்பதால் மதிய சாப்பாடு எடுத்துச்செல்ல தேவையில்லை. 

ஒன்பது மணி பள்ளிக்கு, எட்டு மணிக்கு எல்லாம் போய்விட்டான். அவனை பள்ளியின் வாசலில் அப்பா இறக்கிவிட, ஒரு கல்லினை தட்டிக்கொண்டே பள்ளி மைதானத்தைக் கடந்து வகுப்பறைக்குச் சென்றுவிட்டான். முகத்தில் இருந்த மாஸ்க்கை இறக்கிவிட்டு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று பெருமூச்சுவிட்டான். முன்னர் அமர்ந்து இருந்த 1B வகுப்பினைப் பார்த்து சிரித்துக்கொண்டான். இப்போது முன்னேறி 3Bக்கு போயாச்சு. அவனுக்கு முன்னர் வகுப்பில் ஒருத்தி மட்டும் இருந்தாள். மூன்றாவது வரிசையில் இருக்கும் தன் இருக்கையில் பையினை வைத்துவிட்டு

“ஜெனிஸ், இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?”
அவனுக்கு நான்காவது பாடவேளை PET வகுப்பு என நன்றாக தெரியும். ஆனாலும் ஒருமுறை உறுதிபடுத்திக்கொண்டான். பத்திரமாக இருந்த வெள்ளை ஷூவினை தூசி தட்டி காலையில் அதனை மாட்டிக்கொண்டு வந்துவிட்டான். கால் கொஞ்சம் வளர்ந்து இருந்தது. ”செருப்பே போட்டுகிட்டு போ லோகி”ன்னு அம்மா சொன்னாலும் கேட்காமல் ஷூ போட்டுக்கொண்டு வந்துவிட்டான். தன் இருக்கைக்கு திரும்பி ரப் நோட் எடுத்து லோகி என்று தமிழில் எழுதிவிட்டு புட் பால் ஒன்றினை வரைந்தான்.

மகிழ் வந்தான் அவனிடன் “இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?” என்றான். சாந்தா வந்தாள் அவளிடம் “ இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?”. ரிஷப் வந்தான் அவனிடம் “இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?”. ஒவ்வொருவராக வரவர இதே கேள்வி. டேனியல் வந்த போது மட்டும் “சாப்பிட்டியா டேனி” என்றான்.

வகுப்பிலேயே எல்லோரும் எழுந்து நின்று ப்ரேயரை முடித்துக்கொண்டனர். ”அடுத்த வாரம் முதல் அசம்ப்ளி அறையில் நடக்கும்” என்று நேற்றே சொல்லிவிட்டார் தமிழ் ஆசிரியர். பள்ளி திறந்த மூன்றாம் நாள், டைம் டேபிளை கரும்பலகையில் எழுதிப்போட்டபோது “PET" என்பதை மட்டும் நான்கு வண்ணங்களில் அடித்து வைத்திருந்தான் லோகி. தமிழ் ஆசிரியர் பென்சில்களைப் பற்றி பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். லோகி கையை உயர்த்தினான்.
“என்ன சந்தேகம் லோகி?”
“மிஸ், நாலாவது பீரியட் பிடி தானே மிஸ்”
வகுப்பே கொல் என்று சிரித்தது. ஆமா அதான் உன் சந்தேகமா என முறைத்துவிட்டு பாடத்தை தொடர்ந்தார். இரண்டு பாடவேளைகளுக்க பின்னர் இடைவேளை வந்தது. வரிசையில் ஒவ்வொருவராக கழிவறைக்கு சென்று வந்தனர். “டேனி, வரலையா?” என்று கேட்டான் லோகி. இல்லை என்று தலையாட்டி மறுத்துவிட்டான். 

மூன்றாம் வகுப்பு ஆங்கிலம். அந்த வகுப்பில் யாரும் பேசக்கூடாது. பயங்கரமா கத்திடுவாங்க. இவங்க புது டீச்சர். ஆன்லைன் வந்த பிறகு வந்தவங்க. லோகிக்கு பக்கத்தில் இருந்த சஷாங் “ஏண்டா பிடி பீரியட் மேல அவ்ளோ ஆசை”
“அது பி.இ.டி. Physical Education and Training"
"வாட் இஸ் த சவுண்ட் தேர்”
அமைதியானது. கொஞ்ச நேரத்தில் மணி அடித்தது. வகுப்பில் ஒரே பரபரப்பு. லோகி குனிந்து தன் ஷூ லேசை இறுகக்கட்டிக்கொண்டான். தண்ணீர் குடித்துக்கொண்டான். 

ஆனால்..
கணித ஆசிரியர் உள்ளே நுழைந்தார்.
“மிஸ்ஸ்ஸ்ஸ்” என்று எல்லோரும் கத்த. “போர்ஷன் முடிக்கணும். அடுத்த வருஷம் விளையாடிக்கலாம்” என்றார் ஒரே போடாக. நேராக கரும்பலகையை துடைக்க ஆரம்பித்தார். லோகியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லோருமே அவனைத்தான் பார்த்தார்கள். டீச்சர் வரும்போது இருக்கையில் இருந்து எழுவார்கள். எழுந்த லோகி அமரவே இல்லை. மலர்ந்து இருந்த முகம் வாடிவிட்டது. “சிட் டவுன் லோகி”. அவன் அமரவில்லை. திரும்பத் திரும்ப சொன்னாலும் அமரவில்லை.

குனிந்துகொண்டிருந்த லோகி சன்னமான குரலில் “அ....” என்று ராகமிசைக்க ஆரம்பித்தான். கத்தவில்லை. அ..அ...அ.... என்று சொல்லிக்கொண்டே இருந்தான். பக்கத்தில் இருந்த சஷாங்கும் எழுந்து “அ...” என்று ராகமிசைத்தான். ரெண்டு பேரும் உட்காருங்க, இன்னைக்கு பிஇடி கிடையாது என்றார். ஏன் இவர்கள் கத்துகின்றார்கள் என புரிந்துவிட்டது. இருவரும் நிறுத்தவில்லை. மெல்ல மெல்ல மகிழ், ரிஷப், சாந்தா என எல்லோரும் எழுந்து “அ....” என்று ராகமிசைத்தனர். கணித ஆசிரியருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. புதிய ஆசிரியர் வேறு. “ஸ்டூடன்ஸ் ப்ளீஸ் சிட்” என்று கெஞ்சினார்.

No comments:

Post a Comment