வகுப்பிற்குள் ஒரே சலசலப்பு. பையன்களில் சிலர் சிரித்தார்கள். சிலர் குசுகுசுவென பேசினார்கள். பெண்களில் சிலர் “என்னப்பா” என முணுமுணுத்தார்கள். ஆசிரியர் சக்திவேல் ஒரு மாணவியை வகுப்பிற்குள் அழைத்து வந்திருந்தார். “பசங்களா, இவங்க பேர் மலாலாய் சோயா. பிகார்ல இருந்து வராங்க. இனி உங்க வகுப்பிலதான் படிப்பாங்க. பத்திரமா பார்த்துக்கோங்க” என்று கூறினார். ஆசிரியர் சக்திவேல் வேதியியல் ஆசிரியர். பள்ளிக்கு எது என்றாலும் முன் நின்று நடத்துபவர். துணைத் தலைமை ஆசிரியர். சலசலப்பு முணுமுணுப்பு ஏன் என்றால் மலாலாய் இவர்களைவிட நான்கு அல்லது ஐந்து வயது மூத்தவளாக இருக்க வேண்டும். மேலும் மலாலாயிக்குத் தமிழ் தெரியும் என்ற அறிகுறியே இல்லை. மலாலா முக மலர்ச்சியுடன் மூன்றாம் வரிசையில் அமர்ந்துகொண்டாள்.
அன்று முழுக்க அவளிடம் எல்லோரும் பேச முயன்றனர். ஆனால் மொழி தெரியாததால் பெரிதாக அவளிடம் இருந்து தகவல்கள் பெற முடியவில்லை. மலாலா நான்காம் வகுப்புவரை பீகாரில் படித்திருக்கின்றாள். அப்பா இறந்துவிட, அண்ணன் குடும்பப் பொறுப்பினை ஏற்றுள்ளார். ஊரில் வேலை இல்லாததால் தமிழகத்திற்கு வந்துள்ளார் அண்ணன். ஶ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் தொழிற்பேட்டையில் வேலை கிடைத்தது. குறைந்த வருமானம். அவரால் தங்கையைப் படிக்க வைக்க முடியவில்லை. ஐந்து ஆறு வருடங்களாக பள்ளிக்குப் போகவில்லை. இடையில் மலாலாய்யின் அம்மாவும் இறந்துவிட அண்ணனிடமே மலாலாய் சோயாவும் அவள் அண்ணியும் வந்துவிட்டார்கள். மலாலாய் சோயாவிற்குப் படிக்க ஆசை. அவள் தோழிகள் பலரும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். எல்லாம் குடும்ப சூழல். இந்த நிலையில்தான் சக்தி சாரை எதேச்சையாக சந்திக்கின்றாள். அவர் பள்ளியில் சேர்த்துவிட்டார்.
அன்றைய தினம் இடைவேளையின் போதே மலாலாய் பள்ளியின் பேசுபொருளாக மாறிவிட்டாள். “அவங்க வயசுக்கு பத்தாவது இல்ல படிக்கணும்” என்றனர் சிலர். “தமிழே தெரியாதாம். எப்படி படிப்பாங்க?” என்றனர் சிலர். சில பெண்குழந்தைகள் அவளிடம் சென்று அவள் கைகளைப் பற்றிக்கொண்டனர். ஆனாலும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மலாலாய் வந்தில் விருப்பமில்லை. தலைமை ஆசிரியரிடம் மறுநாள் முறையிடக் கிளம்பினார்கள். அவர்கள் அதைச் சொல்லலாமா வேண்டாமா என்றும் தெரியவில்லை. விடுப்பில் இருந்த தலைமை ஆசிரியர் வந்துவிட்டார். காலையிலேயே பள்ளியின் வாசலில் இருந்து மாணவர்களை அவர் வரவேற்றார். சக்தி சாரும் தலைமை ஆசிரியரும் பேசிக்கொண்டு இருந்தது தெளிவாக வெளியே நின்ற ஆறு மாணவர்களுக்குக் கேட்டது.
“சக்தி சார், எப்படி அந்த பொண்ணை ஆறாவதில் சேர்க்கலாம்? ரொம்ப கஷ்டம் சார். நிறைய பதில் சொல்லணும்”
“....”
“இருக்கிற சிக்கல் போதாதுன்னு இதுவேற புதுசா.. கட்டிடம் இல்ல, கழிவறை இல்ல, க்ளீன் செய்ய ஆள் இல்ல, காம்பெளண்ட் இல்ல..”
“....”
“தமிழே பேசக்கூட வரலன்னு சொல்றீங்க. எப்படி சார் கத்துக்கொடுக்குறது? ரிசல்ட் என்னாகும்?”
வறண்ட குரலில் சக்தி சார் பேசியது நன்றாக வெளியே நின்றவர்களுக்குக் கேட்டது.
“அந்தக் குழந்தை படிக்கணும்னு ஆசைப்படுது. படிக்கணும்ங்கிற அந்த ஆசையே போதும். தமிழும் ஆங்கிலமும் கணக்கும், வேற எதுவுமே மனசு வெச்சா எதுவுமே சாத்தியம். முடியாதுன்னு அந்தக் குழந்தை மனசிலயோ அந்த வகுப்பில இருக்கிற குழந்தைங்க மனசிலயோ விதைச்சிட வேண்டாம். முயற்சி செய்வோம் சார். எல்லாரையும் அரவணைச்சு போறதுதானே கல்வியே”
அறைக்குள் நீண்ட மெளனம் நிலவியது. வெளியே நின்றவர்கள் எதுவும் பேசாமல் வகுப்பிற்குத் திரும்பினார்கள். மலாலாய் சோயாவின் சேர்க்கையைக் கடுமையாக எதிர்த்த சந்தோஷ் மலாலாய் சோயாவிடம் சென்று “வணக்கம்” என்றான். அவளும் “வன்கம்” என்றாள். “இல்லை வணக்கம்”.
ஆசிரியர்கள் பெரிதாக மலாலாய் சோயாவிற்குத் தேவைப்படவில்லை. ஆறாம் வகுப்பு மாணவர்களே சின்ன ஆசிரியர்களாக மாறினார்கள். அவர்களுடைய தம்பி தங்கைகளின் தமிழ்ப் பாடபுத்தகங்களை எடுத்து வந்தார்கள். அது மேல்நிலைப்பள்ளி. ஆறாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் இருக்கும் பள்ளி. ஆனாலும் சுவர்களிலும் கரும்பலகையிலும் அ..ஆ..இ..ஈ என்று தோன்ற ஆரம்பித்தது. மலாலாய் சோயாவிற்காக. கூடவே மலாலாய் மெல்லக் கற்கும் மாணவி. சக நண்பர்கள் அசரவே இல்லை. வகுப்பில் புரியவில்லை என்று அடிக்கடி கைகளை உயர்த்துவாள். ஆசிரியர் நிறுத்தமாட்டார். ஆனால் பாடவேளை முடிந்ததும் ஒரு குட்டிக் கூட்டம் வந்து அவளுக்கு அந்த சந்தேகத்தை விளக்கும்.
மூன்று மாதம் ஓடியது. பள்ளிக்கு கல்வி அமைச்சர் வருவதாக ஒரு நிகழ்ச்சி. தலைமை ஆசிரியருக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. எவை எல்லாம் வேண்டும் என்று பெரிய பட்டியல் போட்டார். ஊர்ப் பெரியவர்கள் எல்லோரும் கூடி என்னென்ன தேவை என்று தனிப் பட்டியல் போட்டார்கள். ஒரு பக்கம் ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். பள்ளி முழுக்கத் தோரணம். கல்வி அதிகாரிகள் பார்வையிட்டனர். காவல் துறையில் இருந்து வந்தனர்.