தாடி தாத்தாவின் வீடு பள்ளிக்கு போகும் வழியில் இருந்தது. அவர் வீடு பூங்காவை ஒட்டிய வீடு. பழைய வீடு. தாடி தாத்தா தாடி தாத்தா என நிறைய கேட்டிருந்தாலும் யாரும் அவரைப் பார்த்ததே இல்லை. அந்த வீட்டிற்குள் இருக்கின்றார் என்று மட்டும் தெரியும். எப்படி இருப்பார், ஏன் தாடி தாத்தா என்று பெயர் வந்தது, எவ்வளவு பெரிய தாடி என்று யாருக்கும் தெரியாது.
கீர்த்தனா, வதனி மற்றும் மோனி மூவரும் தோழிகள். ஒரே வகுப்பு. ஒரே பள்ளி. தினமும் அந்த தாடி தாத்தா வீட்டு வழியாக தான் பள்ளிக்கு செல்வார்கள். அந்த பூங்காவில் தான் விளையாடுவார்கள். எப்போதும் அந்த வீட்டில் என்ன நடக்கின்றது என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள். ஒரே ஒருவர் மட்டும் அந்த வீட்டிற்குள் சென்று வருவார். முருக்கண்ணா என செல்லமாக அவரை அழைப்பார்கள். தாத்தாவிற்கு தேவையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை அவர் தான் வாங்கி செல்வார். ஆனால் தாத்தாவை பற்றி எந்த தகவலும் சொல்லமாட்டார்.
இந்த மூன்று தோழிகளுக்கும் எப்படியாவது தாத்தாவின் வீட்டிற்குள் சென்றுவிட ஆசை. மெல்ல மெல்ல தைரியம் வந்தது. முதலில் மிகவும் பயந்தார்கள்.
“திருவள்ளுவர் மாதிரி தாடி இருக்குமா?”
“பெரியார் தாத்தா மாதிரி தாடி இருக்குமா?”
இப்படி தாடி பற்றி பேசிக்கொள்வார்கள். ஒரு நாள் அவர்களுக்கு விடுமுறை. காலை பூங்காவிற்கு விளையாட வந்தார்கள். ஆனால் பூங்காவை பூட்டி இருந்தார்கள்.
“வா நாம தாத்தா வீட்டுக்கு போவோம்” என்று ஆரம்பித்தாள் வதனி. யார் ஆரம்பிப்பார்கள் என காத்திருந்தவர்களாக சரி சரி என்றார்கள் இருவரும். கதவு திறந்து தான் இருந்தது. மெல்ல மெல்ல வீட்டிற்குள் சென்றார்கள். வீடு சுத்தமாக இருந்தது. ஒரு சன்னலுக்கு அருகே சாய்வு நாற்காலியில் வெளியே இருந்த மரத்தை பார்த்தபடி தாத்தா அமர்ந்து இருந்தார். அப்போது தான் அவர்கள் கவனித்தார்கள். தாடியின் நீளம் எப்படி 20 அடிக்கு இருக்கலாம். முகத்தில் இருந்து கீழே விழுந்து நாலு ஐந்து சுருட்டலும் இருந்தது. 20 அடி என்றால் 3-4 ஆட்களை மேலே மேலே நிற்க வைத்தால் எவ்வளவு உயரத்திற்கு வருமோ அவ்வளவு உயரம். எம்மாடியோவ்.
சத்தம் கேட்டு தாத்தா திரும்பினார்.
“யாரு?” என்றார். மூவரும் அவருக்கு பக்கத்தில் சென்றனர். அவர்கள் கண்கள் தாடியிலேயே இருந்தது. மோனி தொட்டுப்பார்க்க முயன்றாள். மொழ மொழவின்று இருந்தது. “தாத்தா, எப்படி இவ்வளவு பெரிய தாடி வெச்சிருக்கீங்க. என் தலைமுடிய வார முடியாம பாய் கட் செய்துக்கன்னு அம்மா தினமும் கேட்கின்றார்கள்” என்றாள் கீர்த்தனா. இது தான் அவர்கள் அறிமுகப்படுத்திய விதம். மூவரும் தங்கள் பெயர்களை சொன்னார்கள். அப்பா அம்மா பெயர்களை சொன்னார்கள். பள்ளி பற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் சொன்னார்கள். தாத்தா பற்றி வெளியே பேசும் கதைகளை சொன்னார்கள். தாத்தாவிடம் தாடி பற்றிய கதையை கேட்டார்கள். “எப்படி தாத்தா வளக்கறீங்க, ஏதாச்சும் உரம் போடுவீங்களா. செடி வளர போடுவாங்கன்னு படிச்சோம்”.
ஆரம்பத்தில் குறைவாக பேசிய தாத்தா, கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுடன் பேச ஆரம்பித்தார். மூவரும் வீட்டை சுற்றிப்பார்த்தார்கள். கேள்வி கேட்டுகிட்டே இருந்தார்கள். சிலவற்றிற்கு பதில் அளித்தார். சிலவற்றிற்கு புன்னகை மட்டும் செய்தார். மதியம் ஆனது. வீட்டிற்கு கிளம்பினார்கள். தினமும் காலையோ மாலையோ தாத்தாவிற்கு வணக்கம் சொல்லிவிட்டு அன்றைய கதைகள் ஏதாச்சும் சொல்லிவிட்டு போவார்கள். விடுமுறை என்றால் இங்கேயே தான் இருந்தார்கள். தாத்தாவின் தாடிக்கு பிண்ணல் போட்டார்கள். எண்ணை தடவி விடுவார்கள். ஒருநாள் அரை அடி ஸ்கேல் வைத்து மொத்த நீளத்தை அளந்தார்கள். தாத்தா அவர்கள் செய்வதை தடுக்கவே இல்லை. குழந்தைகளுக்கு தாத்தாவிடம் ரொம்ப பிடித்தது அவர் விடும் ஏப்பம் தான். “கியாபுர்க்கி.. கியார்புர்க்கி” என்பார் ஏப்பம் விடும்போது.
ஒரு நாள் காலை தாத்தாவின் வீட்டு வாசலில் கூட்டம் கூடி இருந்தது. பள்ளிக்கு போகும் போது இதனை கவனித்தார்கள் தோழிகள். அச்சோ தாத்தாவுக்கு என்ன ஆச்சுன்னு பயந்துவிட்டார்கள். கூட்டத்தை விளக்கி உள்ளே சென்றார்கள். போலிஸ் கூட இருந்தது. அச்சோ. ஆனால் நடந்தது என்ன தெரியுமா? முந்தைய நாள் இரவு ஒரு திருடன் தாத்தா வீட்டில் திருட வந்திருக்கின்றான். பெரிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தாத்தா தன் தாடியை விரித்து வைத்திருந்தார் போல. திருடன் அந்த தாடியில் மாட்டிக்கொண்டான். நன்றாக சிக்கிக்கொண்டது. அவன் ஓட தாத்தா ஓட இருவரும் இடித்துக்கொண்டு மயக்கமாகிவிட்டார்கள். முருக்கண்ணா காலையில் வந்து போலிஸுக்கு தகவல் சொல்லி இருக்கின்றார். தாத்தா மூவரை பார்த்தும் புன்னகைத்தார்.