அந்த நாளை மறக்கவே முடியாது. சரியாக நான்கு வருடமாகின்றது. அப்போது நான் சின்னப் பெண். இப்போதும் சின்னவள் தான். ஆனால் அக்கா என கூப்பிட ஒரு தம்பி இருக்கின்றான். நான் தான் அன்று அந்த குழந்தைகள் படம் பார்க்க வேண்டும் என அழுதேனாம். இந்த நாளில் நடந்தது பாதி நினைவில் இருக்கு மீதி அப்பாவும் அம்மாவும் சொன்னது. நான், அப்பா, அம்மா மூவரும் அந்த படத்திற்கு போய்விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தோம். தம்பி அப்போது அம்மாவின் வயிற்றில் இருந்தான். இரண்டு சக்கர வாகனத்தில் நான் பெட்ரோல் டாங்கில் அமர்ந்து வந்தேன்.
நல்ல மழை பிடித்துவிட்டது. மழை ஆரம்பிக்கும் முன்னரே நாங்கள் ஒரு பேருந்து நிலைய நிழற்குடையின் கீழ் நின்றுவிட்டோம். அரை மணி நேரத்திற்கு மேல் நல்ல மழை. அப்பா எவ்வளவோ சொன்னார், நீங்க ரெண்டு பேரும் ஆட்டோவில் போயிடுங்கன்னு. அம்மா தான் மறுத்துவிட்டார். இதோ கொஞ்சதூரம் வாங்க என வண்டியில் சென்றோம். மழை பெய்ததாலும் நகர் முழுக்க சாலை சீரமைக்கப்பட்டு வந்ததாலும் உடனே வாகன நெரிசல் ஏற்பட்டது. அடி அடியாக நகர்ந்து கடைசியில் வண்டி நின்றே விட்டது. இனி ஆட்டோ கூட பிடிக்கமுடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டது.
எங்கள் வண்டிக்கு பக்கத்தில் ஒரு சிகப்பு நிற கார் நின்றிருந்தது. லேசான மழைத்தூறல் பெய்துகொண்டிருந்தது. உள்ளே இருந்து ஒருவர் என்னையும் அம்மாவையும் காரில் அமரும்படி அழைத்தார். வண்டியை ஓரத்திற்கு நகர்த்த முடியாது, அருகிலும் ஒதுங்குவதற்கு இடம் இல்லை. அப்பா மட்டும் வண்டியில் இருக்க நானும் அம்மாவும் காருக்குள் சென்றோம். முதலில் அம்மா வர மறுத்தார், காரில் இருந்த அத்தை தான் உள்ளே வரும்படி அழைத்தார். அப்பா அப்படி அழைக்க தான் சொல்லி கொடுத்திருந்தார். அங்கிள் ஆண்டி என அழைப்பதை தவிர்க்கும்படி சொல்லி இருந்தார். காரினை ஓட்டி வந்தது அந்த அத்தை தான். மாமா பின்னிருக்கையில் அமர்ந்து இருந்தார். அம்மா முன்னாலும் நான் பின்னாலும் அமர்ந்தோம்.
அம்மாவின் வயிறு பெரியதாக இருந்ததால் காருக்குள் செல்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது. காரின் சீட்டினை மாமா சரி செய்தார்.
அன்று மிகப்பெரிய வாகன நெரிசல். இதனைப்போல நான் மீண்டும் இவ்வளவு மோசமான வாகன நெரிசலை பார்க்கவில்லை. சுமார் இரண்டுமணி நேரம் ஒரு அடி கூட நகரவில்லை. காருக்குள் மாமா என்னிடம் நன்றாக பேசினார். அம்மாவும் அத்தையும் பேசிக்கொண்டு வந்தார்கள். என் பெயர், பள்ளி, நண்பர்கள் பெயர், என்ன விளையாட்டு விளையாடுவாய், பார்த்துவிட்டு வந்த படம் பற்றி எல்லாம் கேட்டார். சிரிக்க சிரிக்க பேசினார். அவருடைய மீசை அவ்வளவு பெரிதாக இருந்தது. நிஜமான மீசையா என தொட்டும் பார்த்தேன்.
அன்றைய தினம் தான் அந்த மாமாவிற்கு பிறந்தநாள். வீட்டிற்கு சென்றாலும் நாங்கள் இருவர் தான் இருப்போம் அதனால் இங்கயே வெட்டிவிடலாம் என்றார். நான் தான் கேக் வெட்டினேன். எல்லோரும் கேக் சாப்பிட்டோம். வண்டியிலேயே அமர்ந்து இருந்த அப்பாவிற்கும் ஒரு கேக் கொடுத்தேன்.
வண்டிகள் முன்னே நகர ஆரம்பித்தாலும் மழை விட்டபாடில்லை. அம்மாவிற்கு வலி வந்தது என்றார். குழந்தை வெளியே வர இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கு என்று அம்மா அத்தையிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அம்மாவின் வலி அதிகரித்தது. காரிலேயே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக சொல்லிவிட்டு காரினை வேகமாக செலுத்தினார் அத்தை.
அன்று இரவே தம்பி பிறந்தான். மாமாவும் அத்தையும் தான் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்தார்கள். அப்பாவின் வண்டி பஞ்சராகி மருத்துவமனைக்கு வர ஒருமணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. என்னை அந்த மாமா பத்திரமாக பார்த்துக்கொண்டார். அந்த நாள் மறக்கவே முடியாத நாள். தம்பி அத்தனை அழகாக இருந்தான்.
அது நடந்து சரியாக நான்கு வருடம் ஆகின்றது. அந்த நாளுக்கு பிறகு அத்தையையும் மாமாவையும் பார்க்கவே முடியவில்லை. நாங்களும் சில மாதத்தில் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்றுவிட்டோம். இன்று தம்பியை பள்ளியில் சேர்க்க செல்கின்றோம்.
பள்ளியின் வாசலில் அந்த சிகப்பு நிற காரினை பார்த்ததும் “அம்மா, இது அந்த மாமா அத்தை காரா இருக்குமா?” எனக்கேட்டேன். “சிகப்பு காரெல்லாம் அவங்க காரா?” எனச் சொல்லிவிட்டு பள்ளிக்குள் நுழைந்தோம்.
அங்கே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மாமா தான் பள்ளியின் முதல்வர். அவருக்கு எங்களை நினைவில் இல்லை, ஆனால் அந்த சம்பவத்தை சொன்னவுடன் நினைவிற்கு வந்துவிட்டது. மிகவும் மகிழ்ந்தார். அட பெரிய பெண்ணாகிட்டயே என்றார். அந்த நாள் அவர் பிறந்த நாள் பரிசு கேட்டபோது அவர் கன்னத்தில் நான் முத்தம் கொடுத்ததை மறக்காமல் நினைவுபடுத்தினார்.
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா” என்றேன்.
“அட எப்படி உனக்கு தெரியும் ? “ என்றார்.